1. Home
  2. தமிழ்நாடு

நேரு நினைவு அருங்காட்சியகத்தின் பெயர் திடீர் மாற்றம்..! காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு..!

1

நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம்’ என்பது ‘பிரதமர் அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கம்’ என்று அதிகாரபூர்வமாக பெயர் மாற்றப்பட்டுள்ளதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து அக்கட்சியின் ஊடகப் பிரிவுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள நீண்ட பதிவில், "சிறப்பு மிக்க நினைவுச் சின்னமான ஒரு நிறுவனம் நேற்று முதல் புதிய பெயரைப் பெறுகிறது. உலகப் புகழ்பெற்ற நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் (NMML) இனி பிரதமர் அருங்காட்சியகம் மற்றும் நூலகம் (PMML) என்று மாற்றப்படுகிறது.

மோடியிடம் மிகப் பெரிய அளவில் பயம், தாழ்வு மனப்பான்மை, பாதுகாப்பின்மை உணர்வுகள் உள்ளன. அதிலும் குறிப்பாக நமது முதல் மற்றும் நீண்டகாலம் பிரதமராக இருந்த நேருவின் மீது அதிகமாக உள்ளது. மோடிக்கு நேரு மற்றும் அவரது பாரம்பரியத்தை மாற்றும், சிதைக்கும், அவதூறு செய்யும், அழிக்கும் ஒற்றை குறிக்கோள் மட்டுமே உள்ளது. எனவே அவர் N என்பதை எடுத்துவிட்டு அதற்கு பதிலாக P என்று மாற்றியுள்ளார். உண்மையில் P என்பது அற்பத்தனம் மற்றும் கோபத்தையே குறிக்கிறது.

ஆனால், சுதந்திரப் போராட்டத்தில் நேருவின் மகத்தான பங்களிப்பையும், ஜனநாயக, மதச்சார்பற்ற, அறிவியல்பூர்வமான, தாராளமயமான அடித்தளத்துடன் கூடிய இந்திய தேசியத்தை கட்டியெழுப்பிய அவரின் சாதனைகளையும் மோடியால் அழிக்க முடியாது. இவை அனைத்தும் இன்று மோடி, அவரது துதி பாடுபவர்களால் தொடர்ந்து தாக்குதலுக்குள்ளாகி வருகிறது. தொடர்ந்து தாக்குதல் நடத்துகின்ற போதிலும் நேருவின் பாரம்பரியத்தை உலகம் நன்கு அறியும், வரும் தலைமுறையினருக்கும் அவர் தொடர்ந்து ஊக்கம் அளிப்பவராக இருப்பார்" என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நேரு நினைவு அருகாங்காட்சியகம் மற்றும் நூலகம், ஆகஸ்ட் 14-ம் தேதி அதிகாரபூர்வமாக பிரதமர் அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கம் என்று பெயர் மற்றப்பட்டதாக மூத்த அதிகாரி ஒருவர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like