வரும் 15ம் தேதி நடக்கவிருந்த முதுநிலை மருத்துவ படிப்பு 'நீட்' தேர்வு ஒத்திவைப்பு..!
தமிழகத்தில், 17 உட்பட, நாடு முழுதும் 179 நகரங்களில், வரும் 15ம் தேதி, காலை 9:00 முதல் 12:30 மணி வரை, மாலை 3:30 முதல் 7:00 மணி வரை, இரண்டு ஷிப்ட் முறையில் முதுகலை நீட் நுழைவு தேர்வு நடக்கவிருந்தது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், இரண்டு ஷிப்டுகளுக்கு பதிலாக, ஒரே ஷிப்டில் தேர்வு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
சுப்ரீம் கோர்ட் முதுகலை நீட் நுழைவு தேர்வை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்றும் கூடுதல் தேர்வு மையங்கள் மற்றும் போதிய வசதிகள் செய்து கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை செய்வதற்காக வரும் ஜூன் 15ம் தேதி நடைபெற இருந்த முதுகலை நீட் நுழைவு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தேசிய தேர்வு வாரியம் தெரிவித்துள்ளதாவது:
ஜூன் 15, 2025 அன்று நடைபெற திட்டமிடப்பட்டிருந்த முதுநிலை நீட் நுழைவு தேர்வு கூடுதல் தேர்வு மையங்கள் மற்றும் தேவையான உள்கட்டமைப்புகளை ஏற்பாடு செய்வதற்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.மறு தேர்வு நடத்துவதற்கான திருத்தப்பட்ட தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
இவ்வாறு தேசிய தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.