எழுதாத மாணவர்களுக்கு அக்.14ம் தேதி மீண்டும் ‘நீட்’தேர்வு
எழுதாத மாணவர்களுக்கு அக்.14ம் தேதி மீண்டும் ‘நீட்’தேர்வு

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வினை தவறவிட்ட மாணவர்களுக்கு நாளை மறுநாள் (அக்.14ம் தேதி) மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் என தேசிய தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கொரோனா பாதிப்பு மற்றும் போதிய போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் பல மாணவர்கள் தேர்வினை தவறவிட்டு இருந்த நிலையில் இந்த உத்தரவு வெளியாகி உள்ளது.மேலும் தேர்வுகளுக்கான முடிவுகளை அக்.16-ம் தேதி தேசிய தேர்வு முகமை வெளியிட வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நீட் தேர்வு, ஜேஇஇ தேர்வு, ஆகியவற்றை ஒத்திவைக்க வேண்டும் என பல்வேறு எதிர்க்கட்சிகள், மாணவர்கள், பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால் அத்தனை எதிர்ப்புகளையும் மீறி கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி நாடு முழுவதும் செப்டம்பர் 13ம் தேதி நீட் தேர்வு நடத்தப்பட்டது. ஊரடங்கு உத்தரவு, போதிய போக்குவரத்து வசதியின்மை, கொரோனா பாதிப்பு போன்ற காரணங்களால் பல மாணவர்கள் தேர்வினை எழுத முடியாமல் போனது. தேர்வினை தவறவிட்ட மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், கொரோனா பாதிப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக தேர்வெழுத முடியாமல் போன மாணவர்களுக்கு, வரும் அக்டோபர் 14ம் தேதி தேர்வு நடத்துமாறு உச்சநீதிமன்றம் தேசிய தேர்வு முகமையை அறிவுறுத்தி உள்ளது.