ஒற்றைத் தலைமை வேண்டுமா? - பேச்சுவார்த்தையில் கறார் காட்டும் ஓபிஎஸ் !!
ஒற்றைத் தலைமை என்ற பேச்சுக்கே இடமில்லை என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டமாக கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆட்சியில் இருந்தாலும் சரி எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி பரபரப்புக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இல்லாத கட்சி அதிமுக. தற்போது புதிய பிரச்சனையாக வெளிப்படையாக வெடித்துள்ளது ஒற்றைத் தலைமை விவகாரம். வரும் 23ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்தநிலையில், கட்சியில் இரட்டை தலைமையை நீக்கிவிட்டு ஒற்றை தலைமையின் கீழ் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்துள்ளது.
இதற்கு எடப்படி பழனிசாமி ஆதரவாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால், ஓ.பன்னீர்செல்வம் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்த நிலையில், எடப்பாடி பழனிசாமி எந்த கருத்தையும் இதுவரை கூறவில்லை. அதேநேரம் இருவரும் தனது ஆதரவாளர்களுடன் தனித்தனியே தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் ஆறாவது நாளான நேற்றும், முன்னாள் அமைச்சர்களான சி. விஜயகுமார், செங்கோட்டையன், செல்லூர் ராஜு உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். பல மாவட்டங்களை சேர்ந்த கட்சி நிர்வாகிகளும் ஈபிஎஸ்-ஐ சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
தொடர்ந்து, ஓபிஎஸ் வீட்டிற்கு சென்ற செங்கோட்டையன் மற்றும் தம்பிதுரை ஆகியோர், எடப்பாடி பழனிசாமியின் நிலைப்பாடு தொடர்பாக விளக்கியதாக கூறப்படுகிறது. ஆனால், ஒற்றைக் தலைமை என்ற பேச்சுக்கே இடமில்லை என ஓ.பன்னீர்செல்வம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதைதொடர்ந்து, தம்பிதுரை மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் ஓபிஎஸ் இல்லத்தில் இருந்து புறப்பட்டு சென்றனர்.
இதனிடையே, கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாக கடந்த ஆண்டு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி, ஓ. பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். அப்போது, அதிமுகவில் இரட்டை தலைமையே தொடரலாம் என அவர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வைத்திலிங்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
newstm.in