1. Home
  2. தமிழ்நாடு

வினேஷ் போகத் குறித்து நயன்தாரா பெருமிதம்..! "தலை நிமிர்ந்து நடங்க போராளியே"..

1

33ஆவது ஒலிம்பிக் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது.

மல்யுத்த போட்டியில் செவ்வாய்கிழமை நடைபெற்ற பெண்களுக்கான 50 கிலோ எடைப் பிரிவின் அரையிறுதியில் கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மேனுவை அபாரமாக வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் வினேஷ் போகத். மல்யுத்தத்தில் மகளிருக்கான 50 கிலோ பிரிவில் 16ஆவது சுற்று போட்டியில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த யுய் சுசாகியை 3-2 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். காலிறுதிப் போட்டியில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஒக்சானா விஸ்லிவ்னா லிவாக்கை 7-5 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார். நேற்று இரவு 10.25 மணிக்கு நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் கியூபா நாட்டைச் சேர்ந்த யூஸ்னிலிஸ் குஸ்மான் லோப்ஸை எதிர்கொண்டு 5 - 0 என வென்றார்.

இதன் மூலம், வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்ததுடன், ஒலிம்பிக் மல்யுத்த மகளிர் பிரிவின் இறுதிக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றிருந்தார். ஒட்டுமொத்த நாடும், தங்கம் நிச்சயம் என்ற நினைப்போடு தூங்கச் சென்ற நிலையில் காலை 9 மணியளவில் நடந்த உடல் எடை தகுதி பரிசோதனையில் நிர்ணயிக்கப்பட்ட 50 கிலோவை தாண்டி 100 கிராம் அதிகமாக இருந்ததால் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதன் மூலம் வினேஷ் போகத் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியர்களின் பதக்கக் கனவும் தகர்ந்தது.

வினேஷ் போகத்தின் இந்த தகுதி நீக்கம் இந்தியர்களை கலங்க வைத்துள்ள நிலையில், பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலரும் வினேஷ் போகத்துக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நடிகை நயன்தாரா, வினேஷ் போகத்துக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தலை நிமிர்ந்து நடங்கள் போராளியே. நீங்கள் ஏராளமானோருக்கு உத்வேகமாக இருக்கிறீர்கள். உங்களின் மதிப்பு வெற்றிகளால் நிர்ணயிக்கப்படும் ஒன்றல்ல. உங்களுக்கு ஒரு மிகச்சிறந்த பரிசு கிடைத்துள்ளது. அது எந்தவொரு சாதனையையும் பின்னுக்குத் தள்ளும் ஒரு ஆழமான அன்பு. தலையை நிமிர்த்தி அதை ஏற்றுக் கொள்ளுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like