நக்சலைட் தலைவர் குன்னல் கிருஷ்ணன் காலமானார்..!
கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம் தொடுபுழா தாலுகாவில் உள்ள எடமருக் கிராமத்தைச் சேர்ந்தவர் குன்னல் கிருஷ்ணன். 1948-ம் ஆண்டு வயநாடு மாவட்டம், மானந்தவாடி அருகே வாலாட்டிற்கு இடம் பெயர்ந்தார். உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போது கேஎஸ்எஃப்பில் வர்கீஸுடன் (நக்சலைட் வர்கீஸ்) இணைந்து செயல்பட ஆரம்பித்தார். இதன் பின் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்ட போது நக்சல்பாரி இயக்கத்தில் உறுதியாக நின்றவர் குன்னல் கிருஷ்ணன். இறுதிவரை அந்த அரசியல் பாதையில் அவர் செயல்பட்டார். இந்திரா காந்தி கொண்டு வந்த எமெர்ஜென்சி காலத்திற்கும், அதற்குப் பின்னரும் கேரளாவில் நடந்த பிரச்சாரங்களில் முக்கிய பங்கு வகித்தார்.
கேணிச்சரா மடத்தில் நடைபெற்ற மாத்தாய் கொலை, ஜான்மி வீடு தாக்குதல், கயண்ணா காவல் நிலையம் தாக்குதல் ஆகிய வழக்குகளில் அவர் குற்றம் சாட்டப்பட்டார். அவர் பிடிபட்டபோது, காக்காயம் முகாமில் காவல் துறையினரால் கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டார்.
1964 இல் சிபிஐ கட்சி பிளவுபட்டபோது அவர் நக்சல்பாரி இயக்கத்தின் ஒரு பகுதியாக ஆனார். அவர் CPI (ML) செங்கொடி மாநில கவுன்சிலில் முதன்மை பொறுப்பில் இருந்தார்.
இந்நிலையில், நக்சலைட் தலைவர் குன்னல் கிருஷ்ணன் சனிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 85. திருவனந்தபுரத்தில் உள்ள பிராந்திய புற்றுநோய் மையத்தில் (ஆர்சிசி) புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.கனகா என்ற மனைவியும், அஜித்குமார், அனூப்குமார், அருண்குமார், அனிஷா, அனிஷ் என்ற குழந்தைகள் அவருக்கு உள்ளனர்.