திருப்பதி கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவ சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் இன்று வெளியீடு !
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தெலுங்கு பஞ்சாங்கத்தின் படி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை 2 பிரமோற்சவம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு முதல் பிரம்மோற்சவம் கடந்த 19ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை பக்தர்கள் அனுமதி இல்லாமல், மாடவீதியில் சாமி ஊர்வலம் இல்லாமலும் நடந்து முடிந்தது.
இந்நிலையில், 2-வதாக நவராத்திரி பிரம்மோற்சவம் வருகிற 16ஆம் தேதி முதல் தொடங்கி 24ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த பிரம்மோற்சவத்தின்போது ஏழுமலையான் வாகனங்களில் மாடவீதிகளில் வலம் வருகிறார்.
அப்போது ரூ.300 கட்டண டிக்கெட் பெற்ற பக்தர்களை மாடவீதிகளில் அனுமதிப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அதன்படி ஏழுமலையான் கோவிலில் நவரத்திரி பிரம்மோற்சவத்திற்கான ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்கள் இன்றுமுதல் இணையத்தில் பெற்றுக்கொள்ளலாம். www.tirupathibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.
மேலும், பக்தர்கள் அதிகளவில் வருவார்கள் என்பதால் மாடவீதிகளில் சமூக இடைவெளியில் பக்தர்கள் நிற்பதற்காக 6 அடி இடைவெளியில் வட்டமிடப்பட்டுள்ளது. பிரம்மோற்சவத்தின் போது காலை 8 மணிமுதல் 10 மணி வரையும், இரவில் 7 மணிமுதல் 9 மணி வரையும் பக்தர்கள் தரிசிக்கலாம்.
மாட வீதிகளில் பக்தர்கள் அனைவரும் அனுமதிப்பதற்கு முன்னதாக அவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படுகிறது. அவ்வாறு ஏதாவது அறிகுறி தென்படும் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும் பக்தர்களுக்கு கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருடசேவை 20ஆம் தேதி நடக்கிறது. 24ஆம் தேதி தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.
newstm.in