பா.ஜ.க. அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்ற தேசிய மக்கள் கட்சி..!
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு தொடங்கிய இனமோதல் மற்றும் வன்முறை ஓய்ந்தபாடில்லை. இம்பால் பள்ளத்தாக்கில் வாழும் பெரும்பான்மையான மெய்தி இன மக்களுக்கும், சுற்றியுள்ள மலைப்பகுதிகளைச் சேர்ந்த குகி பழங்குடியின மக்களுக்கும் இடையே ஏற்பட்ட இந்த வன்முறையில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். சுமார் 60,000 பேர் ஊரை விட்டு வெளியேறி உள்ளனர். காவல்துறை மற்றும் மத்திய படைகளின் நடவடிக்கைகளால் சற்று தணிந்திருந்த வன்முறை, சமீபத்தில் மீண்டும் தலைதூக்கியது.
ஜிரிபம் மாவட்டத்தில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 6 பேர் கொல்லப்பட்டதையடுத்து நேற்று இரவு மீண்டும் வன்முறை வெடித்தது. மாநில முதல் மந்திரி பிரேன் சிங்கின் வீடு, மந்திரிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் வீடுகளை வன்முறையாளர்கள் தாக்கினர். மேலும் சில இடங்களில் தீவைப்பு சம்பவங்களும் அரங்கேறின.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், பா.ஜ.க. தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை தேசிய மக்கள் கட்சி நேற்று திரும்ப பெற்றுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சி சார்பில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-
மணிப்பூரில் கடந்த சில நாட்களாக நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. பல அப்பாவி உயிர்கள் பலியாகியுள்ளன. மக்கள் பெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். பிரேன் சிங் தலைமையிலான அரசு இந்த நெருக்கடியைத் தீர்க்கவும், இயல்பு நிலையை மீட்டெடுக்கவும் தவறிவிட்டது. எனவே, தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, பிரேன் சிங் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை உடனடியாக விலக்கிக் கொள்ள தேசிய மக்கள் கட்சி முடிவு செய்துள்ளது. இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
60 தொகுதிகள் கொண்ட மணிப்பூரில் தேசிய மக்கள் கட்சிக்கு 7 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். பா.ஜ.க.வுக்கு சட்டசபையில் மெஜாரிட்டி இருப்பதால் (32) ஆட்சிக்கு எந்த சிக்கலும் இல்லை.