இன்று முதல் மாவட்ட தலைநகரங்களில் தேசிய கொடி அணிவகுப்பு..!
சுதந்திர இந்தியாவில் கடந்த 77 ஆண்டுகளாக டெல்லி செங்கோட்டையில் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, தொடர்ந்து 16 ஆண்டுகளும், அதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் பிரதமர்கள் 24 ஆண்டுகள் என மொத்தம் 54 ஆண்டுகள் தேசிய கொடியை ஏற்றி வரலாற்று சிறப்புமிக்க உரையை நிகழ்த்தியிருக்கிறார்கள், இந்தியாவின் வளர்ச்சிக்கு அர்பணித்திருக்கிறார்கள்.
இந்திய தேசிய காங்கிரசுக்கும், தேசிய கொடிக்கும் உள்ள உறவை பா.ஜ.க. உள்ளிட்ட எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை ஏற்றி கொண்டாடுவதற்கு அனைவருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால் பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின்பேரில் வழக்கத்திற்கு மாறாக மாநிலங்களில் தேசிய கொடி அணிவகுப்பு நடத்தி சொந்தம் கொண்டாட முற்படுவதற்கு பா.ஜ.க.வுக்கு எந்த உரிமையும் இல்லை.
தேசியக்கொடிக்கு சொந்தம் கொண்டாட முற்படும் பா.ஜ.க.வின் சூழ்ச்சியை முறியடிக்க வேண்டியது விடுதலைக்கு போராடி நவ இந்தியாவை உருவாக்கிய இந்திய தேசிய காங்கிரசுக்கு உண்டு. எனவே, வருகிற 78-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இன்று 12-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தேசியக்கொடி பொருத்தப்பட்ட நூற்றுக்கணக்கான இருசக்கிர வாகன அணிவகுப்பை முக்கிய வீதிகளில் நடத்த வேண்டும்.
இதை தவிர வட்டார / சர்க்கிள், நகர, பேரூர், கிராமங்களில் தேசியக்கொடியை தாங்கி பாதயாத்திரை நடத்தி விடுதலை போராட்ட வரலாற்றையும், தேச தந்தை காந்தியடிகளின் பங்களிப்பையும் விளக்குகின்ற வகையில் கூட்டங்களை சீரும், சிறப்புமாக நடத்திட அன்போடு கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.