நீலகிரியில் தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்புக்குழு!

தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் 21 சென்டிமீட்டர் அளவுக்கு மழைப்பதிவு இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது. இதையடுத்து, கனமழையால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்கவும், மக்களை பாதுகாக்கவும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக, அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் 43 பேர் நேற்று ஊட்டி வந்துள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் அம்ரித்தை சந்தித்த தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர், அபாயகரமான பகுதிகள் எவையெவை என்பது குறித்து கேட்டறிந்தனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் அம்ரித், வானிலை மையத்தின் கனமழை எச்சரிக்கையை எதிர்கொள்ளும் வகையில், மாவட்டம் முழுவதும் 456 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் 2 பிரிவுகளாகப் பிரித்து, ஊட்டி மற்றும் கூடலூருககு அனுப்பிவைக்கப்படவுள்ளதாகத் தெரிவித்த அவர், மாவட்டத்தில் 283 அபாயமான பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவற்றை 42 குழுக்கள் தனியாக கண்காணித்து வருவதாகவும் கூறினார். இதேபோல், மாவட்டத்தின் அனைத்துத் துறைகளும் மழையால் ஏற்படும் பாதிப்புகளை உடனுக்குடன் சரிசெய்யும் வகையில் தயார் நிலையில் இருந்துவருவதாகவும் ஆட்சியர் அம்ரித் அப்போது தெரிவித்தார்.