1. Home
  2. தமிழ்நாடு

ஊழியர்களுக்கு சம்பள பாக்கியை வழங்க பைஜூஸ் நிறுவனத்திற்கு தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயம் உத்தரவு..!

1

இந்தியாவின் புகழ்பெற்ற எட்டெக் நிறுவனம் பைஜூஸ். 2011-ம் ஆண்டு பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு ஆன்லைன் எட்டெக் ஸ்டார்ட்அப் நிறுவனமாக தொடங்கிய பைஜூஸ், கரோனா காலத்தில் இந்நிறுவனம் பெரும் வளர்ச்சியடைந்தது. இதன்காரணமாக போர்ப்ஸ் பணக்கார பட்டியலில் இடம்பித்தார் இதன் நிறுவனர் பைஜூ ரவீந்திரன். அன்று கோடிகளில் புரண்ட பைஜூஸ் கடந்த சில மாதங்களாக ஊழியர்கள் பணி நீக்கம், வருவாய் இழப்பு, கடன் சுமை, அடுத்தடுத்து நிர்வாகக் குழு உறுப்பினர்கள் விலகல் என கடும் பின்னடைவை சந்தித்து வருகிறது.

பைஜூஸ் நிறுவனம் அந்நியச் செலாவணி விதிமுறைகளை மீறி செயல்படுவதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டதை அடுத்து ரவீந்திரனின் வீடு உட்பட அந்த நிறுவனத்துக்கு தொடர்புடைய இடங்களில் கடந்த ஆண்டு ஏப்ரலில் சோதனை நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த 2011 முதல் 2023 வரையிலான காலத்தில் ரூ.28,000 கோடிக்கும் அதிகமான அந்நிய முதலீடுகளை அந்த நிறுவனம் பெற்றிருப்பது தெரியவந்தது.

அதே காலகட்டத்தில் அந்நிய நேரடி முதலீடு என்ற பெயரில் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பைஜூஸ் நிறுவனம் ரூ.9,754 கோடியை அனுப்பியுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. இத்துடன் ரூ.944 கோடியை விளம்பரம் மற்றும் சந்தைப்படுத்துதல் செலவுகளில் அந்த நிறுவனம் வரவு வைத்துள்ளது. அந்நிய முதலீடுகள் தொடர்பாக போதுமான ஆவணங்களை சமர்ப்பிக்க தவறியதன் மூலம் அந்த நிறுவனம் ரூ.9,362 கோடிக்கு அந்நியச் செலாவணி மோசடியில் ஈடுபட்டுள்ளது கண்டறியப்பட்டது.

தொடர்ந்து அந்நிய நேரடி முதலீடு தொடர்பான ஆவணங்கள் மற்றும் நிறுவனத்தில் முதலீடுகள் குறித்த விவரங்களை தாக்கல் செய்வதில் பைஜூஸ் தாமதம் செய்வதாக அமலாக்கத் துறை குற்றச்சாட்டியது.

அமலாக்கத் துறை நடவடிக்கையை தொடர்ந்து பைஜூஸ் பல சவால்களை சந்திக்கத் தொடங்கியது. அதில் முதலாவது பைஜூஸ் தனது நிதிக் கணக்குகளை சரியான நேரத்தில் தாக்கல் செய்யத் தவறியது, கடனுக்கான வட்டித் தொகையை செலுத்த தவறியது எனத் தொடரப்பட்ட வழக்குகள். அமெரிக்க முதலீட்டாளர்கள் பலர் அரை பில்லியன் டாலர்களை பைஜூஸ் நிறுவனம் மறைத்தது என்று குற்றம் சுமத்தி வழக்கு தொடுத்தன.

இதற்கு அடுத்தபடியாக, பைஜூஸ் நிறுவனத்தில் முதலீடு செய்த நெதர்லாந்து முதலீட்டு நிறுவனமான ப்ரோசஸ் என்வி, “பைஜூஸ் நிறுவனத்தின் அறிக்கை மற்றும் நிர்வாக அமைப்பு போன்றவை இதுபோன்ற ஒரு நிறுவனத்துக்கு போதுமான அளவு வளர்ச்சிய அடையவில்லை. நிறுவனத்தின் வளர்ச்சிக்கு தேவையான எங்களின் ஆலோசனைகளையும் பைஜூஸ் புறக்கணித்தது” என்று குற்றம்சாட்டியதோடு கடந்த ஆண்டு 22 பில்லியன் டாலராக இருந்த பைஜூஸின் மதிப்பீட்டை இந்த ஆண்டு 5.1 பில்லியன் டாலராக குறைத்தது.

இந்த தொடர் குற்றச்சாட்டுகளால் பைஜூஸின் முதலீட்டாளர்கள் பலரும் பின்வாங்கினர். இதனால் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியது. நிறுவனங்களின் செலவினங்களை கட்டுப்படுத்த ஊழியர்களை பணிநீக்கியது. இதன் கடனை திரும்ப செலுத்த முடியாதது தொடங்கி ஒருகட்டத்தில் வாடகை கூட செலுத்த முடியாமல் பெங்களூருவில் உள்ள தனது பிரம்மாண்ட அலுவலகத்தை காலி செய்தது.

வெளிப்படையாக நிதி இல்லை என ஒப்புக்கொண்ட பைஜூஸ் அடுத்தடுத்து சிக்கல்களை சந்தித்து வருவதை அடுத்து அதன் நிறுவனர் ரவீந்திரன் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதை தடுக்க அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது அமலாக்கத் துறை.லுக் அவுட் நோட்டீஸ் என அரசு ஒருபுறம் நெருக்க, பைஜூஸ் பங்குதாரர்கள் மறுபுறம் புதிய நெருக்கடியை கொடுத்து வருகின்றனர். மேலும் மோசமான நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் Byju's, தனது ஊழியர்களுக்கு சம்பள பாக்கியை வழங்க கால தாமதம் செய்து வருகிறது.

இந்நிலையில்,ஊழியர்களுக்கு சம்பள பாக்கியை வழங்க Byju's நிறுவனத்திற்கு தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயம்(NCLT) உத்தரவு பிறப்பித்துள்ளது. சம்பள பாக்கியை வழங்காவிட்டால் இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் தணிக்கைக்கு உத்தரவிட நேரிடும் எனவும் எச்சரித்துள்ளது. இது குறித்து முடிவெடுக்க Byju's நிறுவனம் 48 மணி நேரம் அவகாசம் கேட்ட நிலையில், விசாரணையை ஜூலை 9-ம் தேதிக்கு NCLT ஒத்திவைத்தது
 

Trending News

Latest News

You May Like