1. Home
  2. தமிழ்நாடு

நாளை மறுநாள் பிரதமராக பதவி ஏற்கிறார் மோடி : ஜனாதிபதியை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்..!

1

நாடு முழுவது மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மைக்கு தேவையான 272 தொகுதிகளுக்கு மாறாக, 240 தொகுதிகளே கிடைத்துள்ளன. எனினும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) ஆட்சி அமைக்கும் அளவில் 292 தொகுதிகளை பெற்றுள்ளது. அதேநேரம் இன்டியா கூட்டணி 234 இடங்களை வென்றது.

இந்நிலையில், மத்தியில் ஆட்சி அமைக்க 272 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் 3-வது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது பாஜக. இதற்காக கூட்டணி கட்சிகளுடன் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது.  பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பீகார் முதல்வர் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம், சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேசம், முன்னாள் பிரதமர் தேவகவுடா தலைமையிலான மதசார்பற்ற ஜனதாதளம், மராட்டிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், சிரங் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி போன்ற கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

மத்தியில் ஆட்சியமைக்க 272 தொகுதிகளை கைப்பற்றவேண்டிய நிலையில் பாஜக கூட்டணி 292 இடங்களை கைப்பற்றியுள்ளது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில் நேற்று தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா, ராஜ்நாத் சிங், அமித்ஷா, பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு,மராட்டிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, லோக் ஜனசக்தி கட்சி தலைவர் சிராக் பாஸ்வான் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்றனர். பிரதமர் மோடி இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பா.ஜனதாவிற்கு தங்களது ஆதரவு கடிதத்தை வழங்கினர். தெலுங்கு தேசம் 16, ஐக்கிய ஜனதா தளம் 12 இடங்களில் வென்ற நிலையில் பா.ஜனதா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 

இதனிடையே தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராக ஒரு மனதாக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டார். கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பா.ஜனதா ஆட்சி அமைக்க உள்ள நிலையில் பிரதமர் மோடி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  டெல்லியில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு பக்கத்தில் நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடுவுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நேற்று காலை, பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்பட பலர் பங்கேற்றனர். தேர்தல் முடிவுகள் வெளியாகி பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 3வது முறையாக ஆட்சியமைக்க உள்ள நிலையில் இந்த அமைச்சரவை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.   

இதன் அடுத்தகட்டமாக, தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் மோடி. மேலும், 17-வது மக்களவையை கலைப்பதற்கான பரிந்துரை கடிதத்தையும் ஜனாதிபதி திரெளபதி முர்முவை நேரில் சந்தித்து அளித்தார். டெல்லியில் ராஷ்டிரபதி பவனில் இந்த சந்திப்பு நடந்தது. 17-வது மக்களவையை கலைக்கும் பரிந்துரைகளையும் ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி திரெளபதி முர்மு, பிரதமர் மோடியின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார். மேலும் புதிய அரசு அமையும் வரை மோடியை காபந்து பிரதமராக செயல்படுமாறு கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையே, 3-வது முறையாக பிரதமராக மோடி வரும் சனிக்கிழமை பதவியேற்க உள்ளார். அதற்கு முன்னதாக நாளை (வெள்ளிக்கிழமை) தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி எம்.பி.க்கள் கூட்டம் நடத்தப்படவுள்ளது. இதில் மக்களவையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார் மோடி. அதன்பின் அந்தக் கடிதத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் வழங்கிய பின், சனிக்கிழமை (ஜூன் 8) மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்பார் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Trending News

Latest News

You May Like