1. Home
  2. தமிழ்நாடு

3 - வது முறை பிரதமராக இன்று பதவியேற்கிறார் நரேந்திரமோடி..!

1

பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4-ம் தேதி வெளியானது.  543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும்,  இன்டியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றன.  இதனையடுத்து இன்று பிரதமராக மோடி பதவியேற்கவுள்ளார். மத்தியில் மோடி 3.0 அரசு அமைய அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக நடந்து வருகின்றன. கடந்த முறை தனிப் பெரும்பான்மை பெற்ற பாஜக,  இம்முறை பெறவில்லை. எனவே கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கிறது.  

பதவியேற்பு நிகழ்விற்கு வெளிநாட்டு தலைவர்கள் பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  விருந்தினர்கள் தங்குவதற்கு நட்சத்திர ஓட்டல்கள் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.  பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் போடப்பட்டுள்ளன. ஜனாதிபதி திரௌபதி முர்மு இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7:15 மணிக்கு,  குடியரசு தலைவர் மாளிகையில் மோடி மற்றும் அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணமும்,  ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.  

இந்த விழாவுக்கு தொழிலாளர்கள்,  மத்திய அரசு திட்டங்களில் பலன் பெறுவோர், ரயில்வே ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்படுவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.  விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்கள்,  கலைஞர்கள் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட உள்ளது. அதேபோல்,  புதிய பாராளுமன்ற வளாகம் உள்ளிட்ட “சென்ட்ரல் விஸ்டா” திட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் அழைப்பு அனுப்பப்படுகிறது.  

மத்திய அரசின் திட்டங்களால் பலன் பெற்றவர்களும் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.  விழாவில் பல்வேறு மதங்களைச் சேர்ந்த தலைவர்கள்,  தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள்,  நீதிபதிகள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  இதன்படி நாடு முழுவதும் மொத்தமாக 8000 விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுமட்டுமல்லாது,  பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.  அதனை அவர் ஏற்றுகொண்டார். மாலத்தீவைத் தவிர,  அண்டை நாடுகளான  வங்கதேசம்,  இலங்கை,  பூட்டான்,  நேபாளம், மொரீஷியஸ் மற்றும் சீஷெல்ஸ் ஆகிய நாடுகளின் தலைவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இதனால் டெல்லி முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

நரேந்திரமோடி இன்று பிரதமராக பதவியேற்கவுள்ள நிலையில்,  டெல்லியில் ஜூன் 10ம் தேதி வரை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக டெல்லி காவல்துறையினர் எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “ஜூன் 9 முதல்,  பாரா-கிளைடர்கள்,  பாரா மோட்டார்கள்,  ஹேங் கிளைடர்கள்,  ஆளில்லா விமானங்கள்,  மைக்ரோலைட் விமானங்கள்,  ரிமோட் பைலட் விமானங்கள்,  ஹாட் ஏர் பலூன்கள்,  சிறிய அளவிலான விமானங்கள் போன்றவை வான்வழி தளங்களில் பறக்கத் தடை விதிக்கப்படுகிறது.  இந்த தடை உத்தரவு ஜூன் 10 வரை அமலில் இருக்கும். உத்தரவை மீறினால்,  இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 188ன் கீழ் தண்டனை விதிக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like