தமிழிசை குறித்து அவதூறு.. வருத்தம் தெரிவித்தார் நாஞ்சில் சம்பத்..!

“என்னுடைய பேச்சால் பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை மனம் புண்பட்டிருந்தால், அதற்காக வருந்துகிறேன்” என, சென்னை உயர் நீதிமன்றத்தில் நாஞ்சில் சம்பத் மனு தாக்கல் செய்துள்ளார்.
தமிழக பாஜகவின் தலைவராக பதவி வகித்த தமிழிசையை விமர்சித்து பேசியதாக, அரசியல் பிரமுகர் நாஞ்சில் சம்பத்துக்கு எதிராக புகார்கள் அளிக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து, தமிழகத்தில் பல போலீஸ் நிலையங்களில் சம்பத்துக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
போலீஸ் வழக்குகளை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் நாஞ்சில் சம்பத் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இம்மனுக்கள், நீதிபதி என்.சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தன.
அப்போது, சம்பத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், 'தனிப்பட்ட முறையில் அந்த தலைவரை புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. அவர் பரப்பும் கொள்கைக்கு எந்த ஆதரவும் கிடையாது.
அத்தகைய தலைவரை பின்பற்றும் எவருக்கும் பயன் கிடையாது என்று தான் விமர்சித்தேன். என் பேச்சால் அவர் மனம் புண்பட்டிருந்தால், அதற்காக நான் வருத்தம் தெரிவிக்கிறேன்' என கூறப்பட்டுள்ளது.
சம்பத் தரப்பில் தாக்கல் செய்த மனுவை ஏற்று, வழக்குகளை ரத்து செய்யக் கூடாது எனவும், வழக்கை விசாரிக்க கோரியும் பாஜக வழக்கறிஞர் அலெக்ஸ் முறையிட்டார். இதையடுத்து, வழக்கு டைரியை தாக்கல் செய்வதற்காக விசாரணையை வரும் 19ம் தேதிக்கு நீதிபதி சதீஷ்குமார் தள்ளி வைத்தார்.