நானா படேகர் மீதான பாலியல் குற்றச்சாட்டில் நீதிமன்றம் தீர்ப்பு..!

தீராத விளையாட்டு பிள்ளை' படத்தில் நடித்த தனுஸ்ரீ தத்தா, நடிகர் நானா படேகர் கடந்த 2009ல் தன்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டதாக 2018ல் வழக்கு தொடர்ந்தார்.
‘2008-ஆம் ஆண்டு 'ஹார்ன் ஓகே ப்ளீஸ்' என்ற இந்தி படத்தின் பாடல் காட்சி படமாக்கப்படும் போது, நானா படேகர் மற்றும் மூன்று பேர் தனக்குப் பாலியல் தொல்லை தந்தனர் என்று மும்பை ஒசிவாரா காவல்நிலையத்தில் 2018 ஆம் ஆண்டு புகார் அளித்திருந்தார்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர், நானே படேகரின் வாக்குமூலம் உட்பட பலரது வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர். பின்னர், 2019 ஆம் ஆண்டு மும்பை அந்தேரி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ‘பி ரிப்போர்ட்’ என்னும் அறிக்கையை செய்தனர். அதன்படி, நானா படேகருக்கு எதிரான பாலியல் புகாருக்கு ஆதாரம் இல்லை என்றும் இந்த FIR பொய்யானது என்றும் தெரிவித்திருந்தனர். மேலும், நானா படேகர் மீதான வழக்கை தொடர்ந்து நடந்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து, பி - ரிப்போர்ட்டை எதிர்த்து வேறொரு மனுவைத் தாக்கல் செய்த தனுஸ்ரீ, தனது புகாரில் மேலும் விசாரணை நடத்துவதற்கு உத்தரவிடுமாறு நீதிமன்றத்தை நாடியிருந்தார். இந்த வழக்கு அந்தேரியில் உள்ள ரயில்வே நீதிமன்றத்தின் முதல் வகுப்பு நீதித்துறை மாஜிஸ்திரேட் என்.வி. பன்சால் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
இதுதொடர்பாக நீதிபதி கூறுகையில், “மார்ச் 23, 2008 அன்று நடந்ததாகக் கூறப்படும் ஒரு சம்பவம் தொடர்பாக, இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) பிரிவுகள் 354 மற்றும் 509 இன் கீழ் தத்தா 2018 இல் ஒரு FIR பதிவு செய்துள்ளார். குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (CrPC) விதிகளின்படி இந்தக் குற்றம் தொடர்பாக புகாரளிக்க மூன்று ஆண்டுகள் மட்டுமே வரம்பு உள்ளது.
குறிப்பிட்ட காலக்கெடு முடிந்து 7 ஆண்டுகளுக்கும் மேலாக, அதாவது நீண்ட காலத்திற்குப் பிறகு விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு எனக்கு முன் எந்த உதாரணமும் இல்லை. நீதிமன்றத்தால் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்குத் தடை உள்ளது.
குற்றவியல் சம்பவங்கள் தொடர்பான விரைவான விசாரணைகள் மற்றும் தண்டனைகளை உறுதி செய்ய சட்டங்களின் மூலம் அழுத்தம் கொடுப்பதுதான் வரம்புக் காலத்தை நிர்ணயிப்பதற்கான நோக்கம்” எனத் தெரிவித்தார்.
புகாரை முன்வைப்பதில் ஏற்பட்ட தாமதத்திற்கான காரணத்தை விளக்க எந்த மனுவும் தாக்கல் செய்யப்படவில்லை. நியாயமான காரணமின்றி இவ்வளவு காலதாமதத்தை அனுமதிப்பது, சட்டத்தைக் குறைத்து மதிப்பிடுவதற்கு உட்படுத்தும்” என்றும் நீதிபதி கவலை தெரிவித்தார்... குற்றஞ்சாட்டப்பட்ட சம்பவம் உண்மையென்றோ பொய் என்றோ உறுதியாகக் கூற முடியாது எனத் தெரிவித்த நீதிபதி, வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கான சட்டத்தடை காரணமாக வழக்கை விசாரிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.