1. Home
  2. தமிழ்நாடு

கேல் ரத்னா விருது பரிந்துரையில் இடம் பெறாத பெயர்..!

Q

கேல் ரத்னா விருதுக்கான பரிந்துரையில் பெயர் இடம்பெறாத நிலையில், விருது தனது இலக்கு அல்ல என்று துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் தெரிவித்துள்ளார்.
விளையாட்டுத் துறையில் சாதனை படைத்தவர்களை ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசு ஆண்டுதோறும் கேல் ரத்னா விருது வழங்கி வருகிறது. இந்த நிலையில், விளையாட்டுத் துறையின் உயரிய விருதுக்கான பரிந்துரைப் பட்டியல் வெளியானது. அதில் பாரிஸ் ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதலில் இரண்டு பதக்கங்கள் வென்ற மனு பாக்கரின் பெயர் இடம்பெறாதது பெரும் பேசுபொருளானது. இந்த நிலையில் விருதுச் சர்ச்சை தொடர்பாக மனு பாக்கரும் மவுனம் கலைத்துள்ளார்.
ஒரு வீராங்கனையாகப் போட்டிகளில் நாட்டிற்காகச் சிறப்பாக விளையாடுவதே தனது கடமையென எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். விருதுகளும், அங்கீகாரங்களும் தன்னை ஊக்குவிக்கும் என்றாலும், அது தனது இலக்கு அல்ல என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
விருதுக்கு விண்ணப்பிக்கும்போது தவறு நடந்திருக்கலாம் என்றும் அது சரி செய்யப்பட்டு வருவதாகவும் மனு பாக்கர் தெரிவித்துள்ளார். விருதைப் பொருட்படுத்தாமல் தாய் நாட்டிற்கான அதிக பதக்கங்களை வெல்ல முயற்சி செய்வேன் என்றும், இந்த விவகாரத்தை ஊதிப் பெரிதாக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
முன்னதாக விருதுக்கு விண்ணப்பித்திருந்தும் தனது மகளின் பெயர் பரிந்துரைப் பட்டியலில் இல்லையென மனு பாக்கரின் தந்தை ராம் கிஷன் கூறியிருந்தார்.

Trending News

Latest News

You May Like