பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு..! யார் இந்த நயினார் நாகேந்திரன்?

நயினார் நாகேந்திரன் 1960ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் 1989ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்து செயல்பட தொடங்கினார்.
பணகுடி அதிமுக நகரச் செயலாளர் பொறுப்பில் சிறப்பாக செயல்பட்டதை அடுத்து ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்ட செயலாளராக அவரை அப்போதைய அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நியமித்தார். மேலும், நெல்லை மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பதவிலும் இருந்துள்ளார். ஜெயலலிதா பேரவையின் மாநிலச் செயலாளர் என்ற அதிமுகவின் உயர் பொறுப்பிலும் இருந்துள்ளார்.
எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் விசுவாசியாக அறியப்பட்ட இவருக்கு 2001ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட முதல்முறையாக வாய்ப்பளிக்கப்பட்டது. முதல் தேர்தலிலேயே வெற்றிபெற்ற உடன், ஜெயலலிதா அவருக்கு அமைச்சர் பொறுப்பை வழங்கினார்.
அப்போதைய அமைச்சரவையில் போக்குவரத்து துறை, கிராமப்புற தொழில்கள் துறை, மின்சாரத்துறை, தொழில்துறை அமைச்சராக இருந்தார், நயினார் நாகேந்திரன். இதையடுத்து 2006ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் திருநெல்வேலியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2011 சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் திருநெல்வேலியில் போட்டியிட்டு வென்றார். இதையடுத்து 2016 தேர்தலில் தோல்வியடைந்தார்.
நெல்லையின் செல்லப்பிள்ளையாகவும் அறியப்பட்ட இவர், ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுகவில் குழப்பம் நிலவியபோது, 2017ஆம் ஆண்டு நயினார் நாகேந்திரன் தன்னை அதிமுகவில் இருந்து விடுவித்துக்கொண்டார். அங்கிருந்து விலகிய உடனேயை பாஜகவில் ஐக்கியமானார். கடந்த 8 ஆண்டுகளாக பாஜகவில் பயணித்து வரும் நயினார் நாகேந்திரன் பாஜக சார்பில் கடந்த 2019 மக்களவை தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
அதை தொடர்ந்து 2021 சட்டப்பேரவை தேர்தலில் திருநெல்வேலியில் போட்டியிட்டு பாஜக சார்பில் வெற்றிபெற்றார். அதன்பின், பாஜக சட்டப்பேரவைக் குழு தலைவரானார். தொடர்ந்து எம்எல்ஏவாக இருந்து வந்தாலும் மத்திய அமைச்சரவையில் இடம்பிடிக்கும் நோக்கில் 2024 மக்களவை தேர்தலிலும் போட்டியிட்டார். ஆனால், திருநெல்வேலியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
திருநெல்வேலி மற்றும் அதனை சுற்றியுள்ள தென் மாவட்டங்களில் பாஜக ஏற்கெனவே கால் பதித்துள்ள நிலையில், நயினார் நாகேந்திரனை மாநில தலைவராக்கியிருப்பதால் அதனை மேலும் வலுவாக்கும். தென் மாவட்டங்களில் இருந்து பெரும் இளைஞர் பட்டாளத்தை ஈர்க்கும் விதத்திலும் இந்த நகர்வு பார்க்கப்படுகிறது. முக்கியமாக, அதிமுகவை கூட்டணிக்குள் கொண்டுவருவதற்கு, முன்னாள் அதிமுகவை சேர்ந்தவரான நயினாரை பாஜக தலைவராக்கியிருக்கிறது எனலாம்.
அதாவது, எடப்பாடி பழனிசாமி - அண்ணாமலை ஆகியோர் ஒரு சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதாலும், இருவருக்கும் தொடர்ந்து அரசியல் களத்தில் மோதல்போக்கு நிலவி வந்ததன் காரணத்தாலும் தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் அதிமுக வருவது சிக்கலாகவே இருந்தது. தற்போது அதிமுக தலைவர்களுடன் இணக்கமாக இருக்கவும், எடப்பாடி பழனிசாமி சமூகத்தவராக இல்லாமல் இருக்கவுமே பாஜகவின் தேசிய தலைமை நயினார் நாகேந்திரனை தலைவராக்கியிருக்கிறது என்றும் தகவல்கள் கூறுகின்றன.