அப்பாவி சிறுவன் உயிரிழப்புக்கு அரசு காட்டிய அலட்சியம் தான் காரணம் - நயினார் அட்டாக்.!

சென்னை திருவொற்றியூர் பகுதியில் தேங்கிக் கிடந்த மழைநீரில் மின்சாரம் பாய்ந்து 17 வயது பள்ளி மாணவன் உயிரிழந்ததாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. உயிரிழந்த அம்மாணவனின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் பகுதியில் ஏற்கனவே இரண்டு பேர் மின்சாரம் தாக்கி காயமடைந்துள்ளதாகக் கூறும் நிலையில், மின் கசிவை சரி செய்வதில் அரசு காட்டிய அலட்சியத்தின் விளைவாகவே ஒரு அப்பாவி சிறுவன் பலியாகியுள்ளான். ஒருநாள் மழைக்கே நீர் தேங்குமளவிற்கான உட்கட்டமைப்பு வசதிகளையும், பல நாள் புகாரளித்தும் ஒரு சிறு மின்கசிவைக் கூட சீர்படுத்த முடியாத நிர்வாகத்தையும் வைத்துக் கொண்டு "நாடு போற்றும் நல்லாட்சி" என திமுக-வினர் விளம்பரப்படுத்திக் கொள்வதில் எந்தப் பயனும் இல்லை.
எனவே, மாணவனின் மரணத்திற்கு ஆளும் அரசு முழுப் பொறுப்பேற்றுக் கொண்டு, அம்மாணவனின் குடும்பத்தாருக்கு ரூ. 20 லட்சம் இழப்பீட்டு தொகையாக அறிவிப்பதுடன், சென்னை மாநகரில் முறையான மழைநீர் வடிகால் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என மாண்புமிகு முதல்-அமைச்சரை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.