ஜன.21-ம் தேதி நடைபெறவுள்ள கள் இறக்கும் போராட்டத்துக்கு நாம் தமிழர் கட்சி ஆதரவு..!
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் வரும் ஜனவரி 21-ம் தேதி நடைபெறும் தென்னை மரங்களில் இருந்து கள் இறக்கிச் சந்தைப்படுத்தும் போராட்டத்துக்கு நாம் தமிழர் கட்சி தனது முழு ஆதரவையும் அளிக்கும். அத்துடன் போராட்டத்தில் பங்கேற்று கோரிக்கைகளை வெல்லவும் துணைநிற்கும்.
தமிழர் வாழ்வியலின் ஒரு கூறாக விளங்கிய கள்ளுக்கு தமிழக அரசு விதித்துள்ள தடையை எதிர்த்து, கள் இறக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க தொடர்ச்சியாகப் பல்வேறு அறப்போராட்டங்களை முன்னெடுத்துவரும் தமிழ்நாடு கள் இயக்கத்துக்கு எனது வாழ்த்துகள்,” என்று அவர் கூறியுள்ளார்.
கள் ஒரு போதைப்பொருள் அல்ல. கள்ளை, மரங்களில் இருந்து இறக்கி விற்பனை செய்ய பிற மாநிலங்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே தமிழகத்திலும் கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும் என தமிழ்நாடு கள் இயக்கம் பல ஆண்டுகளாக போராடி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழக அரசு கள்ளுக்கான தடையை நீக்காவிட்டால் வரும் 2025 ஜன.21-ம் தேதி பனை, தென்னை மரங்களில் இருந்து கள் இறக்கி சந்தைப்படுத்தும் போராட்டத்தை தமிழ்நாடு கள் இயக்கம் மேற்கொள்ளும் என அதன் ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.