டெபாசிட் இழந்தது நாம் தமிழர் கட்சி..!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் விசி சந்திரகுமாரின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. பிப்.5ஆம் தேதி நடந்த வாக்குப்பதிவில் பதிவான வாக்குகளில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று வெற்றியை பெற்றுள்ளார். இதனை திமுக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட முக்கியக் கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணித்த நிலையில், திமுகவை எதிர்த்து நாதக மட்டுமே வேட்பாளரை களமிறக்கியது. இத்தனை கட்சிகள் போட்டியிடாத போது, நாதக வேட்பாளர் டெபாசித் தொகை வாங்கவில்லை என்றால், மிகப்பெரிய விமர்சனங்கள் எழும்.
திமுக வேட்பாளர் சந்திரகுமார் 1,14,439 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட நாதக உள்ளிட்ட 45 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். டெபாசிட்டை உறுதி செய்ய 25,777 வாக்குகள் தேவை என்ற நிலையில், நாதக வேட்பாளர் சீதாலட்சுமி 23,810 வாக்குகள் மட்டுமே பெற்றார்.
இந்த இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி டெபாசிட் வாங்குவதற்கு மொத்தமாக 25,777 வாக்குகளை பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் நாதக 1,967 வாக்குகள் வித்தியாசத்தில் டெபாசிட் தொகையையும் இழந்து தோல்வியை சந்தித்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் எந்த தொகுதியில் வெற்றிபெறவில்லை என்றாலும், 8 சதவிகித வாக்குகளை பெற்று மாநிலக் கட்சி அந்தஸ்தை பெற்றது. இதனால் இடைத்தேர்தலில் டெபாசிட் வாங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது நாதக டெபாசிட் கூட பெற முடியாமல் படுதோல்வியை சந்தித்துள்ளது.