1. Home
  2. தமிழ்நாடு

கோவையில் கைதி மர்ம மரணம்..!

1

திருநெல்வேலியை சேர்ந்தவர் யேசுதாஸ்(வயது33).இவர் கடந்த 2012-ம் ஆண்டு திருப்பூரில் நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவருக்குக் கோர்ட்டு இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதித்தது.

இந்த நிலையில் யேசுதாஸ் கடந்த 2023-ம் ஆண்டு முதல் கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார். ஜெயிலில் உள்ள கைதிகளுக்கு ஒவ்வொரு வேலை கொடுக்கப்படுவது வழக்கம்.

அதன்படி யேசுதாசுக்கு ஜெயிலில் உள்ள தொழிற்சாலையில் பணி ஒதுக்கப்பட்டு பணியாற்றி வந்தார்.

கடந்த 27-ந்தேதி யேசுதாஸ், தொழிற்சாலையில் பணியில் ஈடுபட்டிருந்தார். அன்று மதியம் கழிவறைக்கு செல்வதாகக் கூறி சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த காவலர்கள் கழிவறைக்கு சென்று பார்த்தனர். அப்போது அவர் அங்கு மயங்கிய நிலையில் கிடந்தார்.

அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்குச் சிகிச்சை பெற்று வந்த யேசுதாஸ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

யேசுதாஸ் மயங்கி விழுந்ததில், கழுத்து எலும்பில் முறிவு ஏற்பட்டு அழுத்தியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக முதற்கட்ட விசாரணையில் டாக்டர்கள் தெரிவித்ததாகப் போலீசார் கூறினர்.

இருப்பினும் அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜெயில் கைதி மரணம் அடைந்துள்ள நிலையில், பணியில் கவனக்குறைவாக இருந்ததாகக் கோவை மத்திய ஜெயில் துணை வார்டன் மனோரஞ்சிதம், உதவி வார்டன் விஜயராஜ், தலைமை காவலர்கள் பாபுராஜ், தினேஷ் ஆகிய 4 பேரைச் சஸ்பெண்டு செய்து ஜெயில் சூப்பிரண்டு செந்தில் குமார் உத்தரவிட்டுள்ளார்.

 

Trending News

Latest News

You May Like