மயிலாப்பூர் பாஜக தேர்தல் அலுவகத்திற்கு அதிகாரிகள் சீல்..!
மக்களவைத் தேர்தல் பணிகள் நாடு முழுவதும் விறுவிறுப்படைந்துள்ளது. தமிழகத்திலும் திமுக, அதிமுக, பாஜக என அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை வேகப்படுத்தியுள்ளன. இதன் ஒருபகுதியாக பாஜக தொகுதி வாரியாக தேர்தல் அலுவலகங்களைத் திறந்து வருகிறது. கடந்த 5-ம் தேதி அமைந்தகரையில் தேர்தல் பணிகளுக்கான மாநில அலுவலகத்தை அதன் மாநில தலைவர் அண்ணாமலை திறந்து வைத்தார்.
இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் அலுவலகங்கள் திறக்கப்பட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக தென்சென்னை தொகுதிக்கான தேர்தல் அலுவலகம் சென்னை மயிலாப்பூரில் உள்ள ஆர்.கே.மடம் சாலையில் நேற்று திறக்கப்பட்டது.
கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் இந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் தென் சென்னை மக்களவைத் தொகுதி பொறுப்பாளர் ராஜா, மூத்த தலைவர்கள் கரு.நாகராஜன், கராத்தே தியாகராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில், வணிக ரீதியான பயன்பாட்டிற்கு என்று கோயில் இடத்தை வாங்கி அதில் அரசியல் கட்சி அலுவலகம் திறக்கப்பட்டதாகப் புகார் கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறையின் சென்னை மாவட்ட இணை ஆணையர் ரேணுகா தலைமையிலான அதிகாரிகள், இன்று அந்த அலுவலகத்தில் ஆய்வு செய்தனர்.
அதில், கோயில் இடத்தில் தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து பாஜக தேர்தல் அலுவலகத்தை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். நேற்று திறக்கப்பட்ட தேர்தல் அலுவலகம், இன்று சீல் வைக்கப்பட்டது பாஜக நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.