1. Home
  2. தமிழ்நாடு

என் உயிருக்கு ஆபத்து : ஆவேசமாக குரல் எழுப்பிய சவுக்கு சங்கர்..!

1

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் உயர் போலீஸ் அதிகாரிகள், பெண் போலீசார் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கோவை பெண் போலீஸ் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் கோவை 'சைபர் கிரைம்' போலீசார் அவர் மீது முதல் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் இருந்த சவுக்கு சங்கரை, கோவை 'சைபர் கிரைம்' போலீசார் கடந்த 4-ந் தேதி கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

பழனிசெட்டிபட்டியில் சவுக்கு சங்கரை கைது செய்யும்போது, அவரது காரில் கஞ்சா வைத்திருந்ததாக தேனி போலீசார் 2-வது வழக்கை பதிவு செய்தனர். அதிலும் அவர் கைதானார்.சேலம், திருச்சி போலீசார் சார்பிலும் அவர் மீது அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. சென்னை 'சைபர் கிரைம்' போலீசார் ஏற்கனவே 2 வழக்குகளை பதிவு செய்திருந்தனர். அதனடிப்படையில் அவர் கடந்த 8-ந்தேதி கைது செய்யப்பட்டார்.

இந்த 2 வழக்குகள் தொடர்பாக சவுக்கு சங்கர் கடந்த 10-ந்தேதி அன்று கோவையில் இருந்து சென்னை அழைத்து வரப்பட்டு தலைமை மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். இதைத்தொடர்ந்து அவர் மீண்டும் கோவை சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

சவுக்கு சங்கர் மீது தரமணி பெண் சப்-இன்ஸ்பெக்டர் வனிதா கொடுத்த புகாரின் பேரிலும், கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் குறித்து தவறான தகவல்களை வெளியிட்டதாக சி.எம்.டி.ஏ. சார்பில் கொடுக்கப்பட்ட புகாரையொட்டியும் மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.மேலும் கஞ்சா வழக்கு தொடர்பாக தேனி போலீசார் சென்னை மதுரவாயலில் உள்ள சவுக்கு சங்கர் வீட்டின் பூட்டை உடைத்து கடந்த 9-ந்தேதி சோதனை நடத்தினார்கள். சென்னை பாண்டிபஜாரில் உள்ள அவருடைய அலுவலகத்திலும் சோதனை நடத்தி 'சீல்' வைத்தனர். இதைத் தொடர்ந்து சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. இதற்கான உத்தரவை சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பிறப்பித்தார்.

இதனிடையே, சவுக்கு சங்கர் மருத்துவ பரிசோதனைக்காக கோவை சிறையில் இருந்து அரசு மருத்துவமனைக்கு நேற்று அழைத்து செல்லப்பட்டார். அப்போது, ஏராளமான பத்திரிக்கையாளர்கள் அங்கு குவிந்திருந்தனர். அப்போது சவுக்கு சங்கர், "கோவை சிறையில் தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக" ஆவேசமாக குரல் எழுப்பியபடி சென்றார். போலீசார் முன்னிலையிலேயே சவுக்கு சங்கர் இவ்வாறு ஆவேசகமாக குரல் எழுப்பிய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Trending News

Latest News

You May Like