இவர்களால் என் உயிருக்கு ஆபத்து - திருச்சி சூர்யா..!
திருச்சியைச் சேர்ந்த சூர்யா. இவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது:-
திருச்சியில் குடும்பத்துடன் வசிக்கிறேன். எனது தந்தை திருச்சி சிவா நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். நான் பாஜக.வில் ஓபிசி அணி மாநில பொதுச் செயலாளராக இருந்தேன். சமூக ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சி விவாத மேடைகளிலும் பங்கேற்கிறேன்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து 15 ஆடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்திருந்தேன். இதன் காரணமாக, சீமான் என் மீது பழிவாங்கும் நோக்கோடு செயல்படுகிறார். மேலும், அவரது கட்சியை சார்ந்த சாட்டை துரைமுருகன் என்பவரும் எனக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் வீடியோக்களை பதிவிடுகிறார். இவர்கள் என் மீது தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியுள்ளதாகத் தெரிகிறது.
நான் குடியிருக்கும் வீட்டின் மீது கடந்த 2022-ம் ஆண்டு சிலர் தாக்குதல் நடத்தினர். அது தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால் எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி, கடந்த மாதம் காவல்துறையில் மனு அளித்தேன். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும். அதற்கு அரசு விதிக்கும் கட்டணத்தையும் செலுத்தத் தயாராக உள்ளேன். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இம்மனு நீதிபதி நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வழக்கு குறித்த விவரங்கள் முழுமையாக தரப்படவில்லை. கால அவகாசம் வேண்டும் என கோரப்பட்டது. இதைத் தொடர்ந்து, விசாரணையை நவ.7-ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.