கோவை தொகுதி வெற்றிக்காக திமுகவினருக்கு மட்டன் பிரியாணி..!
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி 2 மாதங்கள் ஆகப்போகிறது. ஆனாலும் கொண்டாட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. தேர்தலில் அதிக கவனத்தை ஈர்த்திருந்தது கோவை தொகுதி. திமுகவில் முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமார், அதிமுக ஐடி விங் தலைவர் சிங்கை ராமச்சந்திரன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிட்டனர். மும்முனைப் போட்டியில் தேர்தல் களம் அனல்பறந்த நிலையில், திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தேர்தல் வெற்றி விழாவை முப்பெரும் விழாவாக கோவையில் கொண்டாடினர்.
தற்போது கணபதி ராஜ்குமார் எம்பியாக பதவியேற்றும் கோவை தொகுதி லைம்லைட்டில் உள்ளது. தேர்தலுக்காக திமுகவில் நடந்த முதல் செயல்வீரர்கள் கூட்டத்தில், அந்தத் தொகுதி பொறுப்பாளரான அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, 'கோவையில் சுட சுட மட்டன் பிரியாணி தயார்’ என்று கூறினார். அப்போதிருந்து பாஜக வேட்பாளர் அண்ணாமலையை சீண்டும் விதமாக, 'கோவையில் மட்டன் பிரியாணி’ என்று திமுகவினரும், அதிமுகவினரும் கூறிவந்தனர். டி.ஆர்.பி ராஜா செல்லும் இடமெல்லாம் அவருக்கு ஆடு பரிசாக வழங்கப்பட்டது. தேர்தல் முடிவுகள் வெளியான அன்றைய தினமும், திமுகவினர் மக்களுக்கு மட்டன் பிரியாணி வழங்கி உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.