திருப்பரங்குன்றம் மலை மீது பிரியாணி கொண்டு சென்ற முஸ்லீம்கள் தடுத்து நிறுத்தம்!
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்காவிற்கு அசைவ உணவு (பிரியாணி) கொண்டு செல்ல முயன்ற கேரளாவைச் சேர்ந்த இஸ்லாமிய பக்தர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக நிலவி வரும் சர்ச்சைகள் காரணமாக, கடந்த டிசம்பர் 3-ம் தேதி முதல் பக்தர்கள் மலைக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில், கடந்த 21-ம் தேதி மலை மேல் அமைந்துள்ள சிக்கந்தர் பாஷா அவுலியா தர்காவில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, கடந்த 23-ம் தேதி முதல் நிபந்தனைகளுடன் பக்தர்கள் மலைக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள், குறிப்பாக கேரள மாநிலத்திலிருந்து அதிகளவில் வந்து வழிபாடு செய்து வருகின்றனர்.
இன்று கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்டோர் தர்காவிற்குச் செல்ல வருகை தந்தனர். அவர்கள் தர்காவில் வழிபாடு செய்துவிட்டு உண்பதற்காக வாலிகளில் சிக்கன் பிரியாணி கொண்டு வந்தனர். பழனியாண்டவர் கோவில் அருகே பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் சோதனையிட்டபோது, அசைவ உணவு இருப்பது கண்டறியப்பட்டது.
மலை மீது அசைவ உணவு மற்றும் இதர உணவுப் பொருட்களைக் கொண்டு செல்ல ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. பால், குடிநீர் மற்றும் குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களை மட்டுமே கொண்டு செல்ல அனுமதி உண்டு. புனிதத் தலத்தின் மரபுகளைப் பின்பற்றும் வகையில் அசைவ உணவுகளுக்கு அனுமதி இல்லை என்று கூறி போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். இதனைத் தொடர்ந்து, கொண்டு வந்த பிரியாணி வாலிகளை கீழே வைத்துவிட்டுச் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டதால், பக்தர்கள் அவற்றை மீண்டும் எடுத்துக்கொண்டு திரும்பிச் சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.