1. Home
  2. தமிழ்நாடு

தமிழ் சினிமாவின் மியூசிக் சென்சேஷன் இசையமைப்பாளர் அனிருத்துக்கு இன்று பிறந்த நாள்..!

1

கே.சுப்பிரமணியம், பத்மா சுப்ரமணியம் எனத் திரைத் துறையிலும் கலைத் துறையிலும் கோலோச்சிய புகழ்மிகு கலைஞர்களின் குடும்பத்திலிருந்து வந்தவர் அனிருத். நடிகரும் அனிருத்தின் தந்தையுமான ரவி ராகவேந்தர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மச்சான். ஆனாலும், அனிருத்தின் திரை வருகை அவ்வளவு எளிதாக நிகழ்ந்துவிடவில்லை. அவருடைய வெற்றியும் இன்று அவர் அடைந்திருக்கும் உச்ச நிலையும் தங்கத் தட்டில் வைத்துக் கொடுக்கப்பட்டவை அல்ல.

மிக இளம் வயதிலேயே இசைப் பயிற்சி மேற்கொள்ளத் தொடங்கிவிட்ட அனிருத் பள்ளி, கல்லூரியில் இசைக் குழுக்களில் தீவிரமாகப் பங்கேற்று வந்தவர். புகழ்பெற்ற லண்டன் ட்ரினிட்டி இசைக் கல்லூரியில் பியானோ இசை கற்று தேர்ச்சி பெற்றார். ஒலிப்பொறியியல் பட்டம் பெற்றுள்ளார். கர்னாடக இசையையும் முறைப்படி பயின்றுள்ளார்.

கல்லூரியில் படிக்கும்போது சில குறும்படங்களுக்கு இசையமைத்துள்ளார் அனிருத். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகும் கனவுடன் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட புகழ்பெற்ற இசையமைப்பாளர்களின் ஸ்டுடியோக்களுக்குச் சென்று தன் இசைத் திறமையை வெளிப்படுத்தி வாய்ப்பு கேட்டிருக்கிறார். அனிருத்தின் அத்தை மகளான ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய '3' திரைப்படத்தின் மூலம் அனிருத்தின் திரைப்பட இசைப் பயணம் தொடங்கியது. முதலில் உறவினர்கள் வாய்ப்புகளைப் பகிர்ந்துகொண்ட நிகழ்வாகவே இது பார்க்கப்பட்டது. ஆனால் 2011 இறுதியில் '3' படத்தின் பாடல்கள் வெளியானபோது அந்தப் பார்வை முற்றிலும் நீங்கியது. அனிருத்தின் அபாரமான இசைத் திறமையை கோலிவுட் வியந்து நோக்கியது.

அப்போது பரவலாகிவந்த சிங்கிள் டிராக் –அதாவது படத்தின் இசைத் தட்டிலிருந்து ஒரே ஒரு பாடல் மட்டும் தனியாக வெளியிடும் போக்கு '3' படத்தின் 'ஒய் திஸ் கொலவெறி டி' பாடலின் மூலம் தமிழ் சினிமாவில் இன்றுவரை தவிர்க்க முடியாத அம்சமாக நிலைபெற்றது. நடிகர் தனுஷ் பாடல் வரிகளை எழுதிப் பாடவும் செய்த அந்தப் பாடல் சர்வதேச அளவில் வெற்றி பெற்றது படக்குழுவினருக்கே இன்ப அதிர்ச்சிதான். ஆனால், அது ஒருமுறை மட்டுமே நிகழும் அற்புதம் அல்ல என்பதை '3' படத்தின் மற்ற பாடல்களின் பிரம்மாண்ட வெற்றி உறுதி செய்தது. அந்தப் படத்திலும் தொடர்ந்து வந்த மற்ற படங்களிலும் மெலடி, மேற்கத்திய இசையமைப்பு, ஃபாஸ்ட் பீட் பாடல், குத்துப் பாடல் என அனைத்தும் தனக்குக் கைவந்த கலை என்று நிரூபித்தார் அனிருத்.

'3' படத்தில் தொடங்கிய வெற்றிப் பயணம் தனுஷ், சிவகார்த்திகேயன், விக்ரம், விஜய், அஜித், விஜய் சேதுபதி, சூர்யா, ரஜினிகாந்த், எனப் பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு மறக்க முடியாத வெற்றிப் பாடல்களைக் கொடுத்தார்.தமிழ் சினிமாவின் உச்ச இயக்குநர் ஷங்கருடன் 'இந்தியன்-2' படத்தில் பணியாற்றிவருகிறார்.முன்னணி நட்சத்திரங்கள் மட்டுமல்லாமல் முன்னணி இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் விரும்பும் இசையமைப்பாளராகத் திகழ்கிறார் அனிருத்.

தற்போதைய நிலவரப்படி தமிழ் சினிமாவின் மியூசிக் சென்சேஷனாக அனிருத் உள்ளார். நிற்க கூட நேரமின்றி பம்பரம் போல் சுழலும் அளவுக்கு அவருக்கு தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளிலும் பட வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன.

தமிழில் டாப் ஹீரோக்களான விஜய், அஜித், ரஜினி, கமல் ஆகிய 4 பேரின் படங்களும் தற்போது அனிருத்தின் கைவசம் உள்ளது. விஜய்யின் லியோ, அஜித்தின் விடாமுயற்சி, ரஜினியின் தலைவர் 171, கமலின் இந்தியன் 2 என கோலிவுட்டில் தற்போது அனிருத் ராஜ்ஜியம் தான்.

திரை இசைத் துறையில் மிக இளம் வயதில் மிகப் பெரிய சாதனைகளை நிகழ்த்தி வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் அனிருத் வரும் ஆண்டுகளில் மேலும் பல வெற்றிகளையும் விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெறுவார் என்று உறுதியாக நம்பலாம்.

நியூஸ்டிஎம் சார்பாக அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை சொல்லிக்கொள்கிறோம்.

Trending News

Latest News

You May Like