இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூறிய பழைய பேட்டி வைரல்..!
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், அவரது மனைவி சாய்ரா பானுவை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார். 1995ல் திருமணமான இந்தத் தம்பதிக்கு, 2 மகள், ஒரு மகன் உள்ளனர். விவாகரத்து பற்றி ரஹ்மான் வெளியிட்ட பதிவில், ‘திருமண வாழ்வில் 30 ஆண்டுகளைத் தொட்டுவிடுவோம் என நம்பினோம். ஆனால் எதிர்பாராமல் இப்படியொரு முடிவு வந்துவிட்டது. உடைந்து போன இதயங்களால் கடவுளின் சிம்மாசனமும் நடுங்கக்கூடும். உடைந்த துண்டுகள் மீண்டும் சேரவில்லை என்றாலும் நாங்கள் அதன் அர்த்தத்தைத் தேடுகிறோம்,’ எனக் குறிப்பிட்டு இருந்தார்.
இந்தச் சூழலில், 2012ல் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளரான சிமி கரேவால் உடன் நேர்காணலில் ரஹ்மான் திருமணம்குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ”29 வயதான நிலையில், திருமணத்துக்குச் சரியான காலம் அதுதான் என்று முடிவு செய்தேன். எனினும், மணப்பெண்ணைத் தேடிக் கொண்டிருக்க நேரமில்லாத நான், எனக்கேற்ற பெண்ணைப் பார்க்கும்படி தாயாரிடம் கூறியிருந்தேன்.
”எளிமையான பெண்ணாக இருக்க வேண்டும், நான் இசைப்பணியை செய்வதற்கு அதிகம் தொந்தரவு தராதவராக இருக்க வேண்டும்,” என்று தன் தாயாரிடம் கூறி இருந்ததாக, ரஹ்மான் கூறுகிறார். ‘தன் மனைவியாக வரப்போகிறவர், கொஞ்சம் படிப்பு, கொஞ்சம் அழகு, நிறைய பணிவு கொண்டவராக இருக்க வேண்டும்’ என்றும், அவர் கூறியுள்ளார். ‘மனைவியாக வந்த சாய்ராவின் குணம், நீங்கள் எதிர்பார்த்தது போல் இருக்கிறதா’ என்ற கேள்விக்கு ரஹ்மான் பதில் அளித்துள்ளார்.
”அவர் அமைதியாக இருக்கிறார் என்றால், அமைதியாக இருப்பார். கோபம் வந்து விட்டால் அதைக்காட்டி விடுவார். அவருக்கு இரண்டு பக்கங்கள் இருக்கின்றன. தொடக்கத்தில், வெளியில் அழைத்துச் செல்வதில்லை என்பதால் அவர் விரக்தி அடைந்தார்.
”திருமணத்துக்கு முன்னரே, அவர் எத்தகைய வாழ்க்கையை என்னுடன் வாழ வேண்டியிருக்கும் என்பதை நான் அவரிடம் தெரிவித்து விட்டேன். அந்த வகையில் அது ஒரு முன்கூட்டியே செய்யப்பட்ட ஒப்பந்தம் போன்றது’ என்று ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
தன் திருமணம், மனைவிபற்றி ரஹ்மான் அளித்த பேட்டி, இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.