இன்று ‘முரசொலி’ செல்வம் உடல் தகனம்!
முரசொலி செல்வத்தின் உடல் இன்று (11-ம் தேதி) சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.
திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘முரசொலி’ நாளிதழில் நிர்வாக ஆசிரியராகப் பணியாற்றிவர் முரசொலி செல்வம் (82). இவர், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சகோதரி மகனும், மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் உடன்பிறந்த சகோதரரும் ஆவார். கருணாநிதியின் மூத்த மகளும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் உடன்பிறந்த சகோதரியுமான செல்வியை திருமணம் செய்துகொண்ட முரசொலி செல்வம், பெங்களூருவில் வசித்து வந்தார்.
இவர் வழக்கம்போல, நேற்று முன்தினம் இரவு முரசொலி நாளிதழின் கட்டுரைக்காக குறிப்புகள் எழுதிவிட்டு, பின் உறங்கச் சென்றார். அப்போது, திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, குடும்பத்தினர், அவரைபெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை காலமானார்.
முரசொலி நாளிதழில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியுள்ளார். பல்வேறு திரைப்படங்களுக்கு தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். பூம்புகார் புரொடக்ஷன்ஸ் சார்பில் திருட்டு ராஜாக்கள், காவல் கைதிகள் உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார்.
மறைந்த முரசொலி செல்வத்தின் உடல் நேற்று மாலை 6 மணி அளவில் சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்துக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து கண்ணீர் விட்டு கதறி அழுதார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எம்.பி.க்கள் தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு, மற்றும் துரைமுருகன், பொன்முடி, பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், உள்ளிட்ட அமைச்சர்கள், மதிமுகபொதுச் செயலாளர் வைகோ, பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோபாலபுர இல்லத்தில் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.