மும்பையில் 107 ஆண்டுகளில் இல்லாத மழைப்பொழிவு..!

மும்பையில் பருவ மழை முன்கூட்டியே பெய்து வருகிறது. நகரின் பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்தது. மக்கள் இயல்பு வாழ்க்கையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மழைப்பொழிவு குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:
இன்று காலை முதல் மும்பை மாநகரில் கனமழை பெய்ததால், போக்குவரத்து நிறுத்தம், தண்ணீர் தேங்குதல் மற்றும் உள்ளூர் ரயில்கள் நிறுத்தம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே மும்பையை வந்தடைந்தது, கடந்த 69 ஆண்டுகளில் இல்லாத ஒன்றாகும்.பருவமழை அதன் வழக்கமான தேதியான ஜூன் 11ஐ விட 16 நாட்கள் முன்னதாகவே மும்பையில் பெய்ய தொடங்கி உள்ளது.
இதனால் வழக்கமாக மே மாதத்தில் மும்பையில் மழைப்பொழிவு இருக்காது. இந்த ஆண்டு மே மாதத்திலேயே கனமழை தொடங்கி விட்டதால், 107 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச மழைப்பொழிவை மும்பை மாநகரம் தற்போது எட்டியுள்ளது. இன்னும் இம்மாதம் முடிவதற்கு நாட்கள் உள்ளதால், மழைப்பொழிவில் புதிய உச்சத்தை இந்த ஆண்டு மே மாதம் எட்டும் என எதிர்பார்க்கலாம்.
மும்பையில் தொடர்ச்சியான மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ததால், அங்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இன்று பெய்த மழையால் பரவலான நீர் தேங்கி போக்குவரத்து மற்றும் விமான நடவடிக்கைகள் இயக்கம் கடுமையாக பாதிக்கப்பட்டது. 250க்கும் மேற்பட்ட விமானங்கள் சேவை நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
குர்லா, சியோன், தாதர் மற்றும் பரேல் உள்ளிட்ட பல தாழ்வான பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது