முதுமலை புலிகள் காப்பக சுற்றுலாத்தலங்கள் மூடல்!
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட தெப்பக்காடு பகுதியிலும் கடந்த ஒரு வார காலமாக கனமழை கொட்டியது. இதனால், முதுமலை புலிகள் காப்பகத்தில் மின்சாரம் மற்றும் தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி இன்று முதல் வருகிற நாளை (ஜூலை 22) வரை 2 நாட்கள் முதுமலை புலிகள் காப்பகத்தின் சுற்றுலாத் தலங்கள் மூடப்படுகிறது. அதேபோல், வாகன சவாரியும் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்து முதுமலை புலிகள் காப்பக வனச்சரக அலுவலர் கூறுகையில், “வானிலை ஆய்வு மைய அறிக்கையின்படி நீலகிரி மாவட்டத்தில் பலத்த காற்று மற்றும் கனமழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தெப்பக்காட்டில் கடந்த ஒரு வாரம் பெய்த மழையால் மின்சாரம், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் இன்று முதல் 2 நாட்களுக்கு முதுமலை புலிகள் காப்பகம் சுழல் சுற்றுலா மூடப்படுகிறது” என தெரிவித்தார்.