இசைவாணிக்கு எதிராக எம்.எஸ்.பாஸ்கர் ஆவேசம் : 'ஐயம் சாரி ஐயப்பா. அறிவு புகட்டி அனுப்பப்பா...
கானா பாடகி இசைவாணி, நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று ஐஎம் சாரி ஐயப்பா பாடலை பாடினார். அவர் பாடிய பாடல் இப்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்யப்படுகிறது. இதனால் இப்போது அது சர்ச்சையாகி எதிர்ப்புகள் கிளம்பியது. இந்த விவகாரத்தில் கேள்வி எழுப்பிய தமிழ்நாடு பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா , கானா பாடகி இசைவாணியை தமிழ்நாடு காவல்துறை ஏன் கைது செய்யவில்லை என கேள்வி எழுப்பினார். இது குறிப்பிட்ட மக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாக தெரிவித்தார்.
இதேபோல் பாஜக நிர்வாகிகள் மற்றும் சமூக அமைப்பினர் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் சபரிமலை ஐயப்பன் பாடல் விவகாரத்தில் தன் கருத்தை மேலாளர் வாயிலாக பதிவு செய்திருக்கிறார். அந்த பதிவில் அவர் கூறுகையில், "நான் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர். சமீபத்தில் இசைவாணி அவர்கள் பாடியிருந்த 'ஐயம் சாரி ஐயப்பா' பாடல் கேட்டேன்! சுவாமி ஐயப்பனிடம் மன்னிப்பு கேட்டு பாடத் தொடங்கிய விதம் அருமை, நல்ல குரல் வளம். ஆடிக்கொண்டே பாடிய ஸ்டைல் அற்புதம்! ஒரே ஒரு குறை! பாடல் தெளிவாக கேட்காத அளவுக்கு வாத்தியங்களின் ஓசை அதிகம்.
இதைப்போன்ற கருத்தாழமுள்ள பாடல்களை சபரிமலை அருகிலேயே மேடையிட்டு விஷு, மகரஜோதி போன்ற விசேஷ நேரங்களில் பாடுவது இன்னும் சிறப்பாக இருக்கும்! இவர்களுக்கும் 'பூசை' சிறப்பாக நடக்கும்! நான் சிறுவனாக இருந்த போது எனது மூத்த சகோதரர் சபரிமலைக்கு இருமுடி கட்டி, வாய்க்கரிசி வாங்கி செல்வதை கண்டிருக்கிறேன்.
அதே போல் இவர்களும் உறவினர்கள் நண்பர்களிடம் வாய்க்கரிசி வாங்கிக் கொண்டு சென்று இசை நிகழ்ச்சி நடத்தலாம்! பாடல் எழுதியவரையும் அறிமுகப்படுத்தலாம். இப்படிப்பட்ட அருமையான பாடலை தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என எல்லா மொழிகளிலும் பாடலாம். எல்லா மொழி பக்தர்களும் கேட்டு 'பரிசளிப்பார்கள்' அல்லவா? யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பாடலாம். என்ன ஒன்று. ஐயன் ஐயப்பன் இதை 'நிந்தா ஸ்துதி'யாக ஏற்றுக்கொள்வார்! அவர் வாகனமாகிய புலி ஏற்றுக் கொள்ளுமா என்று தெரியவில்லை! 'ஐயம் சாரி ஐயப்பா. அறிவு புகட்டி அனுப்பப்பா," என்று கூறியுள்ளார்.