நாடாளுமன்ற வளாகத்தில் இரவைத் தாண்டி காலையிலும் தொடரும் எம்பிக்கள் போராட்டம்...

வேளாண் மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அமளியில் ஈடுபட்டதாக 8 எம்பிக்களை நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு உத்தரவிட்டார்.
இதற்கு பல்வேறு கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனிடையே சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள் 8 பேரும், டெரிக் ஓ பிரையன் கே.கே.ராஜேஷ், ராஜீவ் சத்வவ், ரிபுன் போரா, டோலா சென், சையது நாசர் உசேன், சஞ்சய் சிங், எளமறம் கரீம் ஆகியோர் போராட்டத்தில் குதித்தனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் நேற்று மாலை தொடங்கிய இப்போராட்டம் தற்போதும் நீடித்து வருகிறது. போராட்டம் நடத்தி வரும் எம்.பி.க்களுக்கு முன்னாள் பிரதமர் தேவ கவுடா, காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்கள் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர்.
போராட்டத்தின் போது தேச பக்தி பாடல்களை பாடியதுடன் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் எம்.பி.க்கள் முழக்கங்கள் எழுப்பினர். இந்திய வரலாற்றில் இரவு நேரத்தில் நாடாளுமன்ற வளாகத்தில் எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டது இதுவே முதல்முறை.
தங்கள் போராட்டம் காலவரையறையின்றி நடைபெறும் என திரிணமூல் எம்.பி.டெரக் ஓ பிரையன் தெரிவித்தார். இந்நிலையில் போராட்டம் நடத்தி வரும் எம்.பி.க்களுக்கு காலையில், மாநிலங்களவை துணைத் தலைவர் ஹர்வன்ஷ் டீ கொண்டு வந்து வழங்கினார்.
எம்.பி.க்கள் போராட்டத்தையடுத்து அங்கு பாதுகாப்பு பணி பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் எம்பிக்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வாகனங்களும் தயாராக வைக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து 2வது நாளாக நாடாளுமன்ற வளாகத்தில் எம்.பி.க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
newstm.in