1. Home
  2. தமிழ்நாடு

எம்,பி. கமல்ஹாசன் ஆணவக்கொலைக்கு எதிராக கண்டன பதிவு..!

1

தூத்துக்குடியை சேர்ந்தவர் கவின்குமார் (வயது 26). இவர் சென்னையில் உள்ள பிரபல ஐ.டி.நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.இதனிடையே, சொந்த ஊருக்கு சென்ற கவின்குமார் கடந்த 27ந் தேதி நெல்லை பாளையங்கோட்டையில் படுகொலை செய்யப்பட்டார். காதல் விவகாரத்தில் காதலியின் சகோதரன் சுர்ஜித் என்பவர் கவின்குமாரை வெட்டிக்கொன்றார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் கவின்குமாரை கொலை செய்த சுர்ஜித் போலீசில் சரண் அடைந்தார்.

சுர்ஜித்திடம் நடத்தப்பட்ட விசாரணையில் தனது அக்காளை கவின்குமார் காதலித்ததாகவும், காதலை கைவிடுமாறு கூறியதாகவும் இதற்கு மறுப்பு தெரிவித்ததால் கொலை செய்ததாக கூறினார். இதையடுத்து சுர்ஜித்தை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அதில், கவின்குமார் காதலித்த இளம்பெண் மணிமுத்தாறு பட்டாலியன் போலீசில் சப்-இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றும் (எஸ்.ஐ.) சரவணன், கிருஷ்ணகுமாரியின் மகள் என்பது தெரியவந்தது. போலீஸ் தம்பதியின் மகனான சுர்ஜித் தனது அக்காளை காதலித்த கவின்குமாரை கொலை செய்துள்ளார்.

இச்சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில், பெண்ணின் பெற்றோர் இருவரும் சப்-இன்ஸ்பெக்டர் பதவியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பெண்ணின் பெற்றோரை கைதுசெய்யவேண்டும் என்ற கோரிக்கையை வைத்து இரண்டாவது நாளாக கவினின் உறவினர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.

இந்த நிலையில், நடிகரும், எம்,பி.யுமான கமல்ஹாசன் இந்த ஆணவக்கொலைக்கு எதிராக கண்டனம் தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, "பாளையங்கோட்டையில் கவின் செல்வகணேஷ் எனும் 27 வயது ஐடி ஊழியர் ஆணவப்படுகொலை செய்யப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. இந்தக் கொடும்குற்றத்தைச் செய்த குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத்தரவேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். கவினை இழந்து வாடும் குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சாதிய வன்கொடுமை எனும் சமூக இழிவிற்கு எதிராக அனைத்து அரசியல் இயக்கங்களும் ஒன்று திரள வேண்டும். சாதிதான் நம்முடைய முதல் எதிரி என்பதை உணர வேண்டும். முற்றுப்புள்ளி எட்டும் வரை போராட வேண்டும்." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like