வாகன ஓட்டிகள் அச்சம்..! சென்னை அண்ணா ஆர்ச் மேம்பாலத்தில் விரிசல்..!
சென்னை அண்ணாநகர் ஆர்ச் மேம்பாலம் 2016ல் திறக்கப்பட்டது. பூந்தமல்லி நெடுஞ்சாலையிலிருந்து நெல்சன் மாணிக்கம் சாலையை இணைக்கும் வகையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், ரூ.35 கோடியில் இப்பாலம் கட்டப்பட்டது. இந்நிலையில், இந்த மேம்பாலத்தில் சில மாதங்களாக ஆங்காங்கே விரிசல்கள், சிறிய பள்ளங்கள் காணப்படுகின்றன. பூந்தமல்லி சாலையிலிருந்து மேம்பாலத்தில் ஏறி நெல்சன் மாணிக்கம் சாலை நோக்கிச் செல்லும்போது, பல இடங்களில் விரிசல்கள் காணப்படுகின்றன.
மேம்பாலத்தின் தரையில் இரு பகுதிகளை இணைக்கும் விதமாகப் பொருத்தப்பட்ட இரும்பு பட்டை ஒரு இடத்தில் உடைந்து காணப்படுகிறது. உடைந்த இந்த இரும்பு பட்டையின் மீது வாகனங்கள் ஏறி இறங்கும்போது, அதிக சப்தம் எழுகிறது. மேம்பாலத்தின் மையப்பகுதியில் ஆங்காங்கே விரிசல்களும், பாலத்தின் கடைசிப் பகுதி அதாவது, நெல்சன் மாணிக்கம் சாலையில் இறங்கும்பகுதியில் ஒரு பெரிய பள்ளமும் காணப்படுகிறது. இந்த மேம்பாலத்தின் ஏற்பட்டுள்ள பழுதை நெடுஞ்சாலைத்துறை கவனிக்காமல் விட்டால், பாலத்தின் வலுத்தன்மை குறைந்து, அபாயகரமான சூழ்நிலை ஏற்படும் என்று பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த மனோஜ்குமார் கூறியதாவது: “இப்பாலத்தில் பல்வேறு இடங்களில் சிறியது முதல் பெரியது வரை விரிசல்கள் ஆங்காங்கே காணப்படுகின்றன. ஒரு இடத்தில் பாலத்தின் தரைப்பகுதி பெயர்ந்து, பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. ஒரு இடத்தில் தரையை இணைக்கும் இரும்பு பட்டையும் உடைந்து உள்ளது.ஆங்காங்கே குண்டும் குழியுமாகக் காட்சி அளிக்கிறது. இந்தப் பழுதை சீரமைக்காமல் விட்டால், மேலும் பழுது அதிகரிக்கும் நிலை ஏற்படும். எனவே, நெடுஞ்சாலைத் துறையும், மாநகராட்சியும் இணைந்து சீரமைக்க வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்கள்.