1. Home
  2. தமிழ்நாடு

வாகன ஓட்டிகள் குஷி..! ஜி.எஸ்.டி சாலையில் மல்டி லெவல் பார்க்கிங்...!

1

தாம்பரத்தை ஒட்டியுள்ள ஜி.எஸ்.டி சாலை பகுதியில் ஏராளமான வர்த்தக நிறுவனங்கள், ஷாப்பிங் மால்கள் அமைந்துள்ளன.இங்கு செல்வோர் தங்களது வாகனங்களை நிறுத்துவதில் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். சரியான பார்க்கிங் வசதிகள் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் சாலையை ஒட்டி ஆங்காங்கே நிறுத்தப்படும் வாகனங்களால் நெரிசல் இன்னும் அதிகரிக்கவே செய்கிறது. இதற்கு தீர்வு காண தாம்பரம் மாநகராட்சி சார்பில் பலகட்ட ஆலோசனைகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் தான் மாநகராட்சி பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு வெளியாகி கவனம் பெற்றுள்ளது.

அதாவது 10 கோடி ரூபாய் மதிப்பில் பல அடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது பெரிதும் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய சூழலில் ஓரடுக்கு, இரண்டடுக்கு என்பதை தாண்டி 10 மாடிகளுக்கு மேல் பார்க்கிங் செய்யும் வசதிகள் வந்துவிட்டன. ஏனெனில் இடநெருக்கடி முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

எங்கு பார்த்தாலும் கட்டடங்கள் வந்துவிட்ட நிலையில் பரந்த வெளியில் வாகனங்களை நிறுத்த வாய்ப்புகள் இல்லை. அதுவும் சென்னை போன்ற மாநகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை நினைத்து பார்த்தாலே புரிந்து விடும். எனவே தான் அடுக்குமாடி பார்க்கிங் வசதிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. இதற்கான இடத்தை தாம்பரம் மாநகராட்சி விரைவில் இறுதி செய்து நடவடிக்கைகளை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதவிர வேறு சில அறிவிப்புகளும் பட்ஜெட்டில் கவனம் ஈர்த்துள்ளன. அவை, ரூ.4 கோடியில் 5 மண்டலங்களிலும் பசுமை புல்வெளி விளையாட்டு திடல்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதிநவீன படிப்பகங்கள், நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையங்கள், ஏரிகள் புனரமைப்பு, ஸ்மார்ட் வகுப்பறைகள் உள்ளிட்டவை அடங்கும்.

Trending News

Latest News

You May Like