கணவனுடன் வாழ விடாத மாமியார்... மருமகள் தூக்கிட்டு தற்கொலை!
கோவையை சேர்ந்தவர் பாபு. இவர் வயது 56.இவருடைய மகள் 24 வயது சுருதிபாபு , விஷால் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் தனது மகள் சுருதிபாபுவை குமரி மாவட்டம் சுசீந்திரம் தெற்கு மண் பகுதியில் வசித்து வரும் நாகராஜன் - செண்பகவல்லி தம்பதியரின் மகன் கார்த்திக் இவர்களுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொடுத்தனர். திருமணம் முடிந்து பல கனவுகளுடன் தனது கணவர் வீட்டில் வாழ வந்த சுருதிபாபுவை அவரது மாமியார் மனரீதியாக கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது.
தனது மகன் மீது உள்ள அதீத பாசம், தன் மகன் தனக்கு மட்டுமே சொந்தம் என்ற குறுகிய மனப்பான்மையில் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் உணவு சாப்பிட்ட பின்னரே சுருதிபாபு உணவு சாப்பிட வேண்டும், மகனுடன் சுருதிபாபு வெளி இடங்களுக்கு ஒன்றாக சேர்ந்து செல்லவும் மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். மகனுடன் வீட்டில் சுருதிபாபுவை ஒன்றாக வாழவும் விடவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் மனஉளைச்சல் அடைந்த சுருதிபாபு, இது குறித்து தனது தாயாருக்கு வாட்ஸ்ஆப்பில் நேற்று தெரிவித்துள்ளார். சுருதிபாபுவின் பெற்றோர் கோவையில் இருந்து மகளை பார்த்து சமாதானப்படுத்துவதற்காக சுருதிபாபுவின் வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தனர்.
இந்நிலையில் சுருதிபாபுவின் தந்தைக்கு உங்கள் மகள் தூக்கு போட்டு உயிரிழந்து விட்டார் என கார்த்திக்கின் சகோதரி கூறினாராம். அதிர்ச்சி அடைந்த சுருதிபாபுவின் தந்தை தனது மகளின் வீட்டிற்கு வந்தபொழுது உங்கள் மகள் உடல் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என சுருதிபாபுவின் கணவர் கூறியிருக்கிறார். தனது மகளின் மரணத்தல் மர்மம் இருப்பதாகவும் மாமியார் கொடுமைபடுத்தியுள்ளதாகவும் கூறி சுசீந்திரம் காவல் நிலையத்தில் சுருதிபாபுவின் தந்தை புகார் அளித்துள்ளார். இந்தப்புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணம் நடந்து சில மாதங்களே ஆனதால் ஆர்டிஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.