1. Home
  2. தமிழ்நாடு

பெற்ற குழந்தையை விற்ற அன்னை: விசாரணையில் வெளியானது பகீர் தகவல்..!

பெற்ற குழந்தையை விற்ற அன்னை: விசாரணையில் வெளியானது பகீர் தகவல்..!


சென்னை அடுத்து புழல் காவாங்கரை பகுதியைச் சேர்ந்தவர் யாஸ்மின் (28). நேற்று இவர் வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், “நான், புளியந்தோப்பு ஆட்டுத் தொட்டி அருகே ஆட்டோவில் சென்று கொண்டிருந்தேன். அப்போது, முகவரி கேட்பது போல் வந்த இரண்டு பேர், நான் வைத்திருந்த பணப்பையை பறித்துக் கொண்டு தப்பிச்சென்றனர்” எனக் கூறியிருந்தார். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது, பல அதிர்ச்சித் தகவல் வெளியாகியது. கடந்த 11 வருடங்களுக்கு முன்பு மோகன் என்பவருடன் யாஸ்மினுக்கு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு பத்து வயதில் ஒரு மகள் உள்ளார். இதையடுத்து யாஸ்மின் மீண்டும் கர்ப்பமடைந்துள்ளார்.

அப்போது, கணவன் - மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக யாஸ்மினை விட்டு மோகன் பிரிந்து சென்றுள்ளார். யாஸ்மினுக்கு மூச்சுத்திணறல் பிரச்னை இருந்துள்ளது. இதற்காக அவர் எல்லீஸ் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அப்போது ஜெயகீதா என்பவர் யாஸ்மினுக்கு அறிமுகம் ஆகியுள்ளார்.

அப்போது, கருவைக் கலைப்பது குறித்து ஜெயகீதாவிடம் யாஸ்மின் ஆலோசனை கேட்டுள்ளார். இதற்கு அவர் கருவைக் கலைக்க வேண்டாம். குழந்தை பிறந்த உடன் அதை அதிக விலைக்கு விற்று விடலாம் என கூறியுள்ளார். இதற்கு யாஸ்மினும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, வண்ணாரப்பேட்டை அரசு மருத்துவமனையில் யாஸ்மினுக்கு கடந்த 21ம் தேதி குழந்தை பிறந்துள்ளது. பின்னர் ஜெயகீதா இரண்டு நபர்களை அழைத்து வந்து குழந்தையை வாங்கிக் கொண்டு யாஸ்மினிடம் பணத்தைக் கொடுத்துச் சென்றுள்ளனர்.

இந்த பணத்தை வாங்கிக் கொண்டு, தனது மகளுடன் யாஸ்மின் சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் அந்த பணப்பையை பறித்துச் சென்றனர். மேலும் குழந்தையை ரூ.2.5 லட்சத்திற்கு விற்பனை செய்ததும், அதில் ரூ.1.80 லட்சம் கொடுத்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார், குழந்தையை விற்றுக்கொடுத்த இடைத்தரகரான எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ஜெயகீதா(49) என்பவரை கைது செய்தனர். மேலும், ஜெயகீதா வீட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் தங்கியிருந்த திருவள்ளூரைச் சேர்ந்த சண்முகம்(எ) செண்பகம் (39) என்பவரை காவல் நிலையத்திற்கு கூட்டி வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like