பச்சிளம் குழந்தை அக்கி நோயால் அவதிப்படுவதால் கழுத்து அறுத்து கொன்ற கொடூர தாய்..!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே செல்லக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சிவராஜ் (39). எலக்ட்ரிக்கல் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஜீவிதா (28). இவர், தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதிக்கு திருமணமாகி 8 ஆண்டுகளுக்கு பின்பு, கடந்த 1 மாதத்திற்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில் நேற்று தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை கழுத்து அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தது. உடனே அந்த குழந்தையை வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். ஆனால் வழியிலேயே குழந்தை இறந்தது. கழுத்தை அறுத்ததால் குழந்தை இறந்து இருப்பதாக மருத்துவர் தெரிவித்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் குழந்தையின் தாயாரிடம் விசாரணை நடத்தினர். அப்போது முன்னுக்குப்பின் முரணாக அவர் பதில் கூறியதால் போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது குழந்தையை கழுத்தை அறுத்து கொன்றதை ஒப்புக்கொண்டார்.
மேலும் குழந்தைக்கு அக்கி நோய் வந்து கடந்த 3 நாட்களாக அவதிப்பட்டு தொடர்ந்து அழுது வந்தது. இதனால் மனவேதனை அடைந்து குழந்தையை கொலை செய்ததாக தெரிவித்தார். இது குறித்து வாடிப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து ஜீவிதாவை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.