மகனை பள்ளியில் விட்டுவிட்டு வீடு திரும்பிய தாய் தலை நசுங்கி உயிரிழந்த சோகம்!
மயிலாடுதுறை சோழம்பேட்டை சேர்ந்தவர் முத்து. இவர், வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ராஜேஸ்வரி (41). இந்த தம்பதிக்கு சந்தோஷ் (15) என்ற மகன் உள்ளார். இவர், மயிலாடுதுறையில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரை அவரது தாய் ராஜேஸ்வரி, தினமும் பள்ளிக்கு அழைத்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று காலை ராஜேஸ்வரி தனது மகன் சந்தோஷை, பள்ளியில் விடுவதற்காக ஸ்கூட்டரில் மயிலாடுதுறைக்கு அழைத்து வந்திருக்கிறார். மகனை பள்ளியில் மகனை பத்திரமாக விட்டு விட்டு ஸ்கூட்டரில் வீட்டுக்கு திரும்பி உள்ளார். மயிலாடுதுறையில் இருந்து சோழம்பேட்டை நோக்கி சென்ற போது திருமண மண்டபம் சாலை வழியாக ராஜேஸ்வரி சென்று கொண்டிருந்தார்.
அப்போது தென்னைமர சாலையில் அவர் திரும்பியபோது திடீரென அங்கு பின்னால் வந்த லாரி, ஸ்கூட்டர் மீது எதிர்பாராதவிதமாக பின்பக்கமாக மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் மீது லாரியின் பின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே ராஜேஸ்வரி துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து உடனடியாக அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகலின் பேரில் மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். இங்கு உயிரிழந்த நிலையில் கிடந்த ராஜேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக கரூர் மாவட்டம் புன்னம்சத்திரத்தை சேர்ந்த லாரி டிரைவர் பாலசுப்பிரமணியன் என்பர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.