2 மகள்களை கொன்றுவிட்டு தாய் விஷமருந்தி தற்கொலை.. தேனியில் சோகம் !

தேனி அருகே அம்மச்சியாபுரம் கிராமத்தில் சுரேஷ் குமார் - செண்பகவள்ளி தம்பதி வசித்து வந்தனர். இத்தம்பதிக்கு சுரேனா(10) மற்றும் சுரேஸ்ரீ(7) என இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் சுதர்சன் (3) என்ற மகனும் உள்ளனர்.
கணவன் மனைவி இருவருக்குமிடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்ததால் செண்பகவள்ளி மனமுடைந்து காணப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று கணவர் வேலைக்கு சென்ற நிலையில், 3 வயது மகன் விளையாடச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது சுரேனா தற்கொலை செய்ய கொள்ள முடிவு எடுத்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து வீட்டின் அருகே இருந்து அரளி விதயை எடுத்து அதனை அரைத்து அருந்தியுள்ளார். மேலும் தனது இரண்டு மகள்களுக்கும் விஷத் தன்மைகொண்ட அதனை கொடுத்துள்ளார்.
சிறிது நேரத்தில் வீட்டில் மயங்கிகிடந்த அவர்கள் மூன்று பேரையும் கண்ட அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் தாய், மகள்கள் 3 பேரையும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் செண்பகவள்ளி மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும் தீவிர சிகிச்சையில் இருந்த இரண்டு குழந்தைகள் சிகிச்சைப் பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இதனிடையே செண்பகவள்ளியின் தந்தை முனியாண்டி, தனது மகள் கடந்த 2 ஆண்டுகளாக தீராத வயிற்று வலியில் அவதிப்பட்டு வந்ததாகவும், இதனாலே தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறியுள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தாய் தனது இரு மகள்களுக்கும் விஷம் கொடுத்து தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
newstm.in