தாய்- தந்தை ஒன்றுசேர வேண்டும்.. உருக்கமான கடிதம் எழுதிவிட்டு மகன் விபரீத முடிவு !
தாய் - தந்தை தனது இறப்பிலாவது ஒன்று சேர வேண்டுமென பள்ளி மாணவன் கடிதம் எழுதி வைத்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த சிங்களாந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி மேகலா. இத்தம்பதியின் மகன் தருண் அப்பகுதியிலுள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த சில மாதங்களாக ரவி மற்றும் மேகலா தம்பதியினர் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சில நாட்கள் பிரிந்துசென்றாலும் பின்பு ஒன்றுசேர்வர் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இருவரும் தனித்தனியாகவே வாழத்தொடங்கினர்.
இதனால் அவர்களின் மகனான பள்ளி மாணவன் கடும் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. பெற்றோரை சேர்த்துவைக்க முயன்றப்போதும் அவை தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தாய் - தந்தையின் முடிவால் தற்போது அவர்களின் மகன் தருண் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.
இதனிடையே, தற்கொலைக்கு முன்பு, மாணவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியுள்ளது. அதில், தனது இறப்பில் தாய் தந்தை இருவரும் ஒன்றாக சேர வேண்டும் என எழுதியுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் நான் எங்கும் செல்லவில்லை. வீட்டின் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பேன், தனது அம்மா மற்றும் அக்காவை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறும் எழுதியிருந்திருக்கிறார். இதைத்தொடர்ந்து குடும்பத்தினர் பேளுக்குறிச்சி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் கடிதம் மற்றும் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தருண் தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதிய கடிதத்தைப் காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது 12ஆம் வகுப்பு தேர்வு நடைபெறும் நிலையில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in