ரேவண்ணா மீது 25-க்கும் மேற்பட்ட பெண்கள் புகார்..!
கர்நாடக மாநிலம், ஹாசன் தொகுதி மஜத எம்.பி.யான பிரஜ்வல் ரேவண்ணா, 500-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், அதை 2,800 காணொலியாக பதிவு செய்துள்ளதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகாரின் பேரில், ஹொளே நரசிப்புரா காவல் நிலையத்தில் பிரஜ்வல் ரேவண்ணா, அவரது தந்தையும் முன்னாள் அமைச்சருமான எச்.டி.ரேவண்ணா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை சிறப்புப் புலனாய்வுப் படை (எஸ்.ஐ.டி.) விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், ஜெர்மனியிலிருந்து தாயகம் திரும்பிய ரேவண்ணா மீது பாதிக்கப்பட்டுள்ள இரு பெண்கள் அளித்துள்ள புகார்களின் அடிப்படையில், 2 எஃப்.ஐ.ஆர்கள் பதியப்பட்டுள்ளன. தற்போது நீதிமன்றக் காவலில் உள்ள ரேவண்ணாவிடம், சிறப்பு விசாரணைக் குழு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இந்த வழக்கில் மேலும் பல சாட்சியங்களையும், பாதிக்கப்பட்டோரையும் இணைப்பதன் மூலம், ரேவண்ணா மீதான பாலியல் வன்கொடுமை வழக்கிலிருந்து அவர் தப்பிக்க முடியாத வகையில் தேவையான நடவடிக்கைகளை சிறப்பு விசாரணைக் குழு எடுத்துள்ளது.
ரேவண்ணாவால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டுள்ள மேலும் 25க்கும் மேற்பட்ட பெண்கள் கண்டறியப்பட்டு, அவர்களிடம் முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் ரேவண்ணாவால் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்கள் பலர், ரேவண்ணா மீது புகாரளிக்க முன் வந்திருப்பதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.