பிரபல நடிகை வீட்டில் பணம் திருட்டு..!

நடிகை ஷோபனா தளபதி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இரண்டு மாடி கொண்ட குடியிருப்பில் தன் தாயுடன் நடிகை ஷோபனா வசித்து வருகிறார். தரை தளத்தில் பரதநாட்டிய பயிற்சி வகுப்பு நடத்தி வருகிறார்.
வயது மூப்பு காரணமாக தன் தாய் ஆனந்தத்தைப் பார்த்துக் கொள்ள கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியை சேர்ந்த விஜயா என்பவரை ஷோபனா ஏற்பாடு செய்திருந்தார். கடந்த ஓராண்டாக வீட்டிலேயே தங்கி விஜயா பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக ஆனந்தம் வைத்திருந்த பணம் திடீர் திடீரென காணாமல் போனது. வீட்டிற்கு வெளியாட்கள் யாரும் வராத நிலையில் பணம் மட்டும் மாயமாகி வந்ததால், நடிகை ஷோபனாவுக்கு வேலைக்காரப் பெண் விஜயா மீது சந்தேகம் வந்தது. உடனே அவரை அழைத்து கேட்ட போது, நான் பணத்தை எடுக்கவில்லை என்று மறுத்து விட்டார்.
இதையடுத்து பணம் திருடு போவதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் நடிகை ஷோபனா புகார் செய்தார். அதில், தன் வீட்டில் பணியாற்றும் வேலைக்கார பெண் விஜயா மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் போலீசார் விஜயாவை பிடித்து விசாரணை நடத்தினர். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் பணம் திருடியதை விஜயா ஒப்புக் கொண்டார்.
கடந்த மார்ச் மாதம் மூலம் ஜூன் மாதம் வரை நடிகை ஷோபனாவின் தாய் ஆனந்தத்திடம் இருந்து சிறுக சிறுக ரூ.41 ஆயிரம் பணத்தை திருடினேன். அந்த பணத்தை நடிகை ஷோபனாவின் கார் டிரைவர் முருகனிடம் கொடுத்து, ஊரில் உள்ள என் மகளுக்கு ஜிபே மூலம் அனுப்பினேன் என்று விஜயா போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். வறுமை காரணமாக நான் பணத்தை திருடிவிட்டேன். என்னை வேலையில் இருந்து நீக்கி விடாதீர்கள் என்று நடிகை ஷோபனாவிடம், விஜயா போலீசார் முன்னிலையில் கேட்டுக்கொண்டார்.
பிறகு நடிகை ஷோபனா, விஜயா தொடர்ந்து வீட்டில் வேலை செய்யட்டும், அவர் திருடிய ரூ.41 ஆயிரம் பணத்தை சிறுக சிறுக சம்பளத்தில் பிடித்து கொள்கிறேன் என்றும், அவர் மீது நடவடிக்கை வேண்டாம் என்று போலீசாரிடம் கேட்டுக்கொண்டார். இருந்தாலும், போலீசார் பணம் திருடிய விஜயா மற்றும் அவருக்கு உதவிய டிரைவர் முருகனிடம் கடிதம் எழுதி வாங்கி கொண்டு கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர்.