மலையாள நடிகர் சங்க பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்ய மோகன்லால் முடிவு..?
நடிகர் மோகன்லால் தன்னுடைய 18வது வயதில் ‘திராணோட்டம்’ என்ற திரைப்படத்தின் மூலமாக நடிக்க தொடங்கி இருந்தாலும் அவருக்கு முதலில் ‘மஞ்சில் விரிச்சா பூக்கள்’ என்ற படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்த படம் தான் முதலில் வெளியாகி இருந்தது. அதே நேரத்தில் மலையாளத்தில் அவரை பலரும் லலேட்டன் (மூத்த சகோதரன்) என்று அழைத்து வருகிறார்கள்.
மோகன்லாலின் நடிப்பு மலையாள சினிமாவை தாண்டி தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் அதிகமாக பிரதிபலித்திருக்கிறது. அதிலும் தமிழில் முன்னணி நடிகர்களோடு இணைந்து இருவர், சிறைச்சாலை, ஜில்லா, உன்னைப்போல ஒருவன், காப்பான் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் குறிப்பாக இருவர் படத்தில் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாகவும், ஏழைகளின் விடிவெள்ளியாகவும் அடையாளம் படுத்தப்பட்ட எம்ஜிஆரை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஆனந்தன் கேரக்டரில் அவ்வளவு சிறப்பாகவும் உயிர்ப்புடனும் நடித்துக் காட்டி இருந்தார்.
தமிழ் மலையாளம் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், இந்தி மொழி படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இதனிடையே மலையாள நடிகர் சங்கத்துக்கு 2021-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தலைவராக மோகன்லாலும், செயலாளராக எடவேல பாபுவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
ஆனால் தலைவர் பொறுப்பு ஏற்ற பிறகு மோகன்லாலின் செயல்பாடுகளில் நடிகைகள் தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வந்தனர். குறிப்பாக பாலியல் பாலாத்கார வழக்கில் சிக்கி நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கி வைக்கப்பட்ட திலீப்பை மீண்டும் சங்கத்தில் மோகன்லால் சேர்த்துக்கொண்டது சர்ச்சையானது. மோகன்லாலை நடிகைகள் பலரும் கண்டித்தனர்.
நடிகர் சங்க கூட்டங்களிலும் அவருக்கு எதிர்ப்பு குரல் ஒலித்தன. இதன் காரணமாக மீண்டும் நடிகர் சங்க பொறுப்பில் தொடர விரும்பாமல் ராஜினாமா செய்ய மோகன்லால் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மலையாள நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. வேட்பு மனுக்கள் வருகிற 3-ம் தேதி முதல் பெறப்படுகின்றன. மோகன்லால் மீண்டும் தலைவர் பதவியில் நீடிக்கப்போவதில்லை என்று தெரிவித்து இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறினர். இதுபோல் 25 ஆண்டுகளாக நடிகர் சங்க பொறுப்பில் இருக்கும் எடவேல பாபுவும் ராஜினாமா செய்ய இருக்கிறார்