நாட்டின் பெயரை மட்டும் வைத்துக்கொண்டு மக்களை தவறாக வழிநடத்த முடியாது - மோடி..!

பாஜக எம்.பி.க்களின் வாராந்திர கூட்டத்தில் நேற்று பிரதமர் மோடி கலந்து கொண்டார். அதில் அவர் பேசும்போது, "இதுநாள் வரையில் நான் இதுபோன்ற திக்கற்ற எதிர்க்கட்சியினரைப் பார்த்தது இல்லை. ‘இன்டியா’ என்ற பெயருக்காக அவர்கள் தங்களையே புகழ்ந்து கொள்கிறார்கள். கிழக்கிந்திய கம்பெனி, இந்தியன் முஜாகிதீன், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா போன்றவற்றிலும் இந்தியா என்ற பெயர் இருக்கிறாது. அதனால், ‘இன்டியா’ என்ற பெயரால் ஒன்றும் ஆகிவிடாது. நாட்டின் பெயரை மட்டும் வைத்துக்கொண்டு மக்களை தவறாக வழிநடத்த முடியாது.
தோல்வி, சோர்வு, நம்பிக்கையின்மை போன்றவற்றால் மோடியை எதிர்ப்பது ஒற்றையே கொள்கையாக வைத்திருக்கிறார்கள். அவர்கள் எதிர்க்கட்சிகளாக மட்டுமே இருக்க முடிவு செய்திருப்பதையே அவர்களின் நடத்தை காட்டுகிறது. வரும் 2024 மக்களவைத் தேர்தலில் மக்களின் ஆதரவுடன் பாஜக எளிதில் வெற்றி பெறும்" என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
கடந்த வியாழக்கிழமை முதல் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் ‘மணிப்பூர் மாநில கலவரம் தொடர்பாக பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும். அதன்பிறகு இந்த விவகாரம் குறித்து விரிவான விவாதம் நடத்த வேண்டும்’ என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதனால் வியாழக்கிழமை தொடங்கி நேற்று வரையிலான 4 நாள்களிலும் எந்தவிதமான அலுவல்களும் நடக்கவில்லை. இந்தப் பின்னணியில் பிரதமர் மோடியின் எதிர்க்கட்சிகள் மீதான இந்த விமர்சனம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.