1. Home
  2. தமிழ்நாடு

நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்கள்: மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்..,!

W

சென்னை தலைமைச் செயலகத்தில், மின்சார வாரியத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் டாக்டர் ராதாகிருஷ்ணன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் கூட்டாக பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
தற்போது புற்றுநோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் மக்களைத் தேடி மருத்துவம் உள்ளிட்ட திட்டங்கள் மூலம் அரசு மக்களுக்கு சேவையாற்றி வருகிறது. தற்போது பெரிய சவாலாக இருப்பது தொற்றா நோய்களாகும். தமிழகத்தில் குடிசைப் பகுதி மக்கள், தூய்மைப் பணியாளர்கள், கட்டிடத் தொழிலாளிகள் போன்ற சாதாரண மக்கள் தங்களின் உடல் நிலையை மருத்துவ ரீதியாக முன்கூட்டி பரிசோதிப்பதில்லை. அதை செய்வதற்காக நலம் காக்கும் ஸ்டாலின் என்ற திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை நாளை (அதாவது இன்று) முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைக்கிறார்.
அனைவருமே இதில் பங்கேற்கலாம். மாவட்டம் தோறும் அரசு விடுமுறை இல்லாத நாட்களில், குறிப்பாக சனிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் 4 மணிவரை இந்த திட்டம் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெறும். ரத்த அழுத்தம், சர்க்கரை நோயாளிகள், இருதய நோய்கள், மனநலன் பாதிப்பு உள்ளவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைவருமே இந்த முகாம்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.
மொத்தம் 1,256 முகாம்கள் நடைபெற உள்ளன. சென்னையில் 15 மண்டலங்களில் முகாம்கள் நடைபெறும். முகாம் நடக்கும் இடத்தில் தொழில்நுட்ப மேம்பாட்டுடன் கூடிய நோய் கண்டறியும் வசதிகள் இருக்கும். பரிசோதனை கூடம் அங்கேயே அமைக்கப்பட்டு பிற்பகலுக்குள் வாட்ஸ்ஆப் மூலம் சோதனை முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிடும். தேவைப்படுவோரை தொடர் சிகிச்சைக்குள் கொண்டு வருவோம்.
மற்ற துறைகளும் இந்த முகாமில் பங்கேற்பதால், மருத்துவ காப்பீட்டு வசதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள் போன்ற கூடுதல் வசதிகளும் இந்த முகாமில் வழங்கப்படும். இந்த முகாமில் பெயர் பதிவு செய்பவர், பிற்காலங்களில் தமிழ்நாட்டில் வேறு எந்த ஆஸ்பத்திரிக்கு சென்றாலும் அவரது உடல்நல விவரங்களை கண்டறியும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர், தூய்மைப் பணியாளர்கள், தொழிலாளர் ஆகியோரை பங்கேற்கச் செய்ய அந்தந்த துறைகள் நடவடிக்கை மேற்கொள்கின்றன. தூய்மைப் பணியாளர்கள் நலவாரியத்தில் 3 லட்சம் பேர் உள்ளனர். 20 தொழிலாளர் நல வாரியங்களில் 48.56 லட்சம் பேர் உள்ளனர். அமைப்புசாரா தொழிலில் உள்ளவர்களும் இருக்கின்றனர். இவர்களுக்கு உடல்நலன், நோய் தடுப்பு பற்றிய விழிப்புணர்வும் தரப்படும்.
இந்த மாதம் முதல் வரும் பிப்ரவரி வரை முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படும். அதன் பிறகும் தேவைப்பட்டால் முகாம்கள் நடத்தப்படும். திட்டத்தின் முதல் கட்டத்தில் குறைந்தபட்சம் 10 லட்சம் பேர் வரலாம் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Trending News

Latest News

You May Like