மதராசி கேம்ப் இடிப்பால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு தமிழர் குடும்பத்திற்கும் ரூ.8000 நிதியுதவி - மு.க.ஸ்டாலின்..!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெல்லி, ஜங்புரா பகுதியில் மதராசி கேம்ப் எனப்படும் குடிசைப் பகுதியில் தமிழர்களின் வீடுகள் இடித்து அகற்றப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பதற்கு, நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா அவர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
அந்த கடிதத்தை நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு மற்றும் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் ஆகியோர் டெல்லி முதலமைச்சரிடம் வழங்கினர். அதில், பாதிக்கப்பட்ட 370 தமிழர்கலின் குடும்பத்திற்காக பல்வேறு கோரிக்கைகளை அவர் முன் வைத்திருந்தார்.
- பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவிற்கான (EWS) அடுக்குமாடிக் குடியிருப்புகளை முழுமையாகப் பூர்த்தி செய்து, பாதிக்கப்பட்ட உரிமை பெற்ற 189 குடும்பங்களுக்கு வழங்க வேண்டும்.
- விரைவான சமூக உள்கட்டமைப்பு மற்றும் பிரத்யேகமான போக்குவரத்து சேவைகளை வழங்கிட வேண்டும்.
- மீதமுள்ள 181 இடம் பெயர்ந்த குடும்பங்களுக்கு வருமான உச்சவரம்பு, குடியிருப்புத் தேவைகள் மற்றும் வைப்புத்தொகை நிபந்தனைகளில் சிறப்புத் தளர்வுகளை வழங்க வேண்டும்.
- தொடர்ந்து, பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவிற்கான (EWS) வீடுகளைப் பெறுவதற்கான தகுதியை விரிவுபடுத்திட வேண்டும்.
- G-7-ல் தற்காலிக டெல்லி தமிழ்க் கல்விச் சங்கத்தின் (Delhi Tamil Education Association-DTEA) பள்ளியை அனுமதிக்க வேண்டும்.
- இதன் மூலம், தற்காலிக தமிழ் வழிப் பள்ளியை நிறுவுதல், உடனடி சேர்க்கை மற்றும் சிறப்புப் போக்குவரத்து வசதிகளுடன் அல்லது நிரந்தர வசதிகள் தயாராகும் வரை, ஒதுக்கப்பட்ட இருக்கைகள் மற்றும் இடைக்கால போக்குவரத்து வசதியுடன் அருகிலுள்ள டெல்லி மாநகராட்சிப் பள்ளியில் தமிழ் பயிற்றுவிப்பை அங்கீகரித்தல் போன்றவற்றைச் செய்திட வேண்டும்.
- இடம்பெயர்ந்த பெண்களுக்கு தொழில் பயிற்சி மற்றும் குறு நிறுவன மானியங்கள் மூலம் வாழ்வாதார ஆதரவைத் திரட்டிட வேண்டும்.
இடம்பெயர்ந்த அனைத்துக் குடும்பங்களுக்கும் சுமூகமான மறுவாழ்வை உறுதி செய்வதற்கு அனைத்து வகையிலும் தமிழ்நாடு அரசு உதவ தயாராக உள்ளது” இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், டெல்லியில் பாதிக்கப்பட்ட 370 தமிழர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில், சிறப்பு நிகழ்வாக வீடுகளை இழந்தவர்களுக்கு ஒருமுறை நிதியுதவியாக தலா ரூ.8 ஆயிரம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
தொடர்ந்து, அரிசி, கோதுமை, பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய், மசாலாப் பொருட்கள் அடங்கிய ரூ.4 ஆயிரம் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கிட, ரூ. 50 லட்சம் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.