ஃபெஞ்சல் புயலின்போது மின்கம்பியில் மிதித்து உயிரிழந்தவருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்: முக ஸ்டாலின்..!
வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் கடந்த 2 நாட்களாக உருவாகுவதில் தாமதம் செய்து ஏமாற்றி வந்தது. இறுதியில் நேற்று மாலை முதலே புயல் தனது தீவிரத்தை வெளிப்படுத்த தொடங்கியது. இதையடுத்து நேற்று இரவு மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. இதனால் நேற்று இரவு முதலே சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சுரங்கப்பாதைகள், தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. அங்கு தேங்கிய நீரை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியா்கள் ஈடுபட்டு வருகின்றனா். மேலும் சூறை காற்று காரணமாக பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள் மற்றும் மரங்கள் முறிந்து விழுந்தன.
சென்னையை ஸ்தம்பிக்க செய்ய ஃபெஞ்சல் புயல் உயிர் பலியையும் வாங்கி உள்ளது. ஒட்டுமொத்தமாக ஃபெஞ்சல் புயல் காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. சென்னை பிராட்வே அருகே உள்ள ஏடிஎம் மையத்திற்கு சந்தன் என்பவர் வந்தார். அவர் ஏடிஎம் எந்திரத்தில் பணம் எடுக்க வந்தபோது அங்கு மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், சந்தன் வடமாநிலத்தை சேர்ந்தவர் என்பதும், மழைக்கு இடையே பணம் எடுக்க ஏடிஎம் மையத்திற்கு வந்தபோது அங்கு திடீரென மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தெரிந்தது.
மேலும் சென்னை வேளச்சேரியை சேர்ந்த சக்திவேல் என்பவர் அறுந்து கிடந்த மின்கம்பியில் கால் வைத்ததால் பரிதாபமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதேபோல் வியாசர்பாடி பகுதியில் மின்சாரம் தாக்கியதில் 3 வது நபரும் பலியானார். இந்த நிலையில் சக்திவேல் உயிரிழப்புக்கு முதல் அமைச்சர் முக ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் சக்திவேல் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி உதவி அளித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது வலைத்தள பக்கத்தில்,”சென்னை மாவட்டம் வேளச்சேரி விஜயநகரில் அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்து உயிரிழந்த திரு. வி.சக்திவேல் அவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் மற்றும் ரூ. 5 இலட்சம் நிதியுதவியை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது” என முக ஸ்டாலின் கூறியுள்ளார்.