சென்னை கடற்கரையில் நடந்த அதிசயம்..! நீல நிறத்தில் தெரிந்த கடல் அலைகள்..!
கடலில் வாழும் ஒரு செல் உயிரியான டைனோ ப்ளாச்சுலேட்(dinoflagellates), கடல் மின்மினி பூச்சி என்று அழைக்கப்படுகிறது. இது கடலில் உள்ள நீரின் தன்மை மற்றும் அதற்கான ஊட்டச்சத்து சரியான விகிதத்தில் அமையும்போது சூரிய வெளிச்சத்தில் சார்ஜ் செய்து கொண்டு, எப்படி சோலார் விளக்குகள் எரிகிறதோ அதுபோல இருளில் ஒளி வீசுகிறது.
இந்த ஒரு செல் உயிரியின் உடலில் உள்ள வேதிப்பொருளான லூசிபெரின், லூசிபரேஸ் ஆகியவை ஆக்சிஜனோடு சேரும்போது, ஒளி வெளியாகிறது. இதற்கு பெயர்தான் Bioluminescence. பல வகையில் இந்த உயிரி இருப்பதால், அதைப் பொறுத்து வெளியிடும் நிறங்களும் மாறுபடும். தன்னை பாதுகாத்துக்கொள்வதற்காகத்தான் இந்த பாசி ஒளிர்வதாகச் சொல்லப்படுகிறது.
மீன்கள் இந்த பாசியை சாப்பிட முயலும்போது இந்த பாசி தன்னிடம் இருக்கின்ற அந்த ஒளிர்வைக்காட்டி, மீன்கள் வந்தால் அவற்றை பயமுறுத்தி திசை திருப்ப இந்த ஒரு யுத்தியை பயன்படுத்துவதாகவும் அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இது போன்ற பாசிகள் கடலில் எப்போதும் இருந்தாலும், அவை அதிகமாகும்போது மட்டுமே இவ்வாறு மிளிருமாம்.
இதேபோன்ற நிகழ்வு உலகின் பல்வேறு கடற்பகுதியில் நடந்திருக்கிறது. கடந்த வருடம், அக்டோபர் 2023 ECR கடற்கரையில் இந்த நீல ஒளி நிகழ்வு நடந்திருக்கிறது.